அமீரகத்திற்கு உதவ போர் விமானம் மற்றும் போர்க் கப்பலை அனுப்பும் அமெரிக்கா.
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதியின் அரசுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளின் கூட்டு படைகள் சவுதி அரேபியா தலைமையில் ஹவுதி அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனையடுத்து ஹவுதி அமைப்பு, அந்த கூட்டு நாடுகளுக்கு எதிராக தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் 17 ஆம் தேதி ஹவுதி அமைப்பு அமீரகம் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இரண்டு இந்தியர்களும், ஒரு பாகிஸ்தானியரும் உயிரிழந்தனர். அந்த தாக்குதல் நடைபெற்ற சில நாட்களில் ஹவுதி அமைப்பு அமீரகம் மீது மீண்டும் இரண்டு ஏவுகணைகளை ஏவியது. அதனை அமீரகம் தடுத்து அழித்தது. பின்னர் கடந்த திங்களன்று மீண்டும் அமீரகத்தை நோக்கி ஏவுகணைகளை ஏவியது ஹவுதி. அதனையும் அமீரகத்தின் படைகள் தடுத்து அழித்தன.
இதனை அடுத்து அபுதாபி இளவரசர் முகமது பின் சயீத்திடம் தொலைபேசி வாயிலாக பேசிய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், தற்போதைய அச்சுறுத்தலுக்கு எதிராக அமீரகத்திற்கு உதவும் வகையில், 5 ஆம் தலைமுறை போர் விமானங்களையும், போர்க் கப்பல்களையும் அனுப்பும் முடிவை எடுத்துள்ளது. மேலும் வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளை அழிக்கும் யு.எஸ்.எஸ் கோல் என்ற அமைப்பை வழங்குவதாகவும், இது அங்குள்ள கடற்படையுடன் இணைந்து செயல்படும் என்று தெவித்தார்.