கொரோனா தாக்கத்தின் காரணமாக, துபாயில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் 2 கடைகள் மூடப்பட்டுள்ளன.
ஆப்பிள் நிறுவனம் தற்போது அமீரகத்தில் துபாய் மால், மால் ஆஃப் தி எமிரேட்ஸ் மற்றும் யாஸ் மால் ஆகிய மூன்று மால்களில் விற்பனை நிலையங்களை இயக்கி வருகிறது.
இந்நிலையில் அபுதாபியில் உள்ள யாஸ் மாலில் உள்ள விற்பனை நிலையம் தொடர்ந்து செயல்படும் என்றும், துபாயில் உள்ள 2 கடைகள் மட்டும் ஜனவரி 13ந் தேதி வரை மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“துபாயில் உள்ள எங்கள் கடைகள் ஜனவரி 13 வரை தற்காலிகமாக மூடப்படும். அனைவரின் ஆரோக்கியத்தில் நாங்கள் கவனமாக உள்ளோம். விரைவில் எங்கள் வாடிக்கையாளர்களை சந்திப்போம்” என்று ஆப்பிள் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் டைம்ஸ் டிசம்பர் 27, 2021 அன்று, ஆப்பிள் ஐபோன் ஊழியர்களிடையே ஏற்பட்ட தொற்று காரணமாக சுமார் 20 ஆப்பிள் சில்லறை கடைகள் மூடப்பட்டதாக அறிவித்தது. தொற்றுநோயிலிருந்து ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க சில கடைகள் முன்னெச்சரிக்கையாக மூடப்படுவதாகவும் அறிவித்திருந்தது.
அமீரகத்தில் இந்த மாதம் மட்டும் 2வது முறையாக தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை 2700யை கடந்து பதிவாகியுள்ளது. அதை கவனத்தில் கொண்டும், பாதுகாப்பு நடவடிக்கை காரணமாகவும் துபாயில் உள்ள 2 ஆப்பிள் ஷோரூம்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.