ராஸ் அல் கைமாவின் ஷமால் பகுதியில் உள்ள கரடுமுரடான மலைப்பகுதியில் விழுந்த அரபு நாட்டு இளைஞரை ராஸ் அல் கைமா சிவில் டிஃபென்ஸ் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இது குறித்து, ராஸ் அல் கைமாவின் குடிமைத் தற்காப்புத் துறையின் இயக்குநர் ஜெனரல் முகமது அப்துல்லா அல் ஜாபி, தனது நண்பர்களுடன் அரபு நாட்டு இளைஞர் ஒருவர் அல் ஷமா மலைப்பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது கீழே விழுந்ததாக கட்டுப்பாடு அறைக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக ராஸ் அல் கைமா சிவில் டிஃபென்ஸில் இருந்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது. கரடுமுரடான மலைப்பகுதி காரணமாக மீட்புப் பணி சுமார் 8 மணி நேரம் நீடித்தது. பாதைகள் இல்லாத இடத்திற்கு ஸ்ட்ரெச்சர்கள் மற்றும் கயிறுகளைப் பயன்படுத்தி அந்த நபர் மீட்கப்பட்டார். கீழே விழுந்த அந்த நபருக்கு தோள்பட்டை முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து இரவு 9.30 மணியளவில் தேசிய ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மீட்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர்களை குடிமைத் தற்காப்புத் துறையின் இயக்குநர் ஜெனரல் முகமது அப்துல்லா அல் ஜாபி பாராட்டினார்.
மலைப் பகுதிகளுக்குச் செல்பவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக கரடுமுரடான மற்றும் வழிகளில் இல்லாத இடங்களில் செல்வதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். முகாமிடுவதற்கும், நடைப்பயணம் மேற்கொள்வதற்கும் ராஸ் அல் கைமாவில் ஏராளமாக இடங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.