இந்த டிஜிட்டல் உலகில் எவ்வளவோ டெக்னாலஜி சாத்தியமாகி வரும் அதே நேரத்தில் ஏமாற்றுபவர்களும் தங்களை அப்டேட் செய்துகொண்டே தான் வருகின்றனர். ஆகவே மக்களாகிய நாம் தான் எப்போதும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
ஆடை உற்பத்தி நிறுவனமொன்றின் உரிமையாளராக நடித்து ஏமாற்றிய 46 வயதான ஆசிய ஆடவர் ஒருவர் அவரால் ஏமாற்றப்பட்ட அமெரிக்க பெண்மணிக்கு $2,50,000 வழங்க வேண்டும் என்று துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும், அவரது தண்டனைக் காலம் முடிந்ததும் நாடு கடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்டவரிடம் தனது சொந்த நாட்டில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும், துபாய் மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கு பொருட்களை இறக்குமதி செய்வதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அந்த அமெரிக்க பெண்மணியை தனது நிறுவனத்தில் கூட்டாளியாக இருக்குமாறு கூறி பொய்யான ஆவணங்களை அவரிடம் வழங்கியுள்ளார். அந்த பெண் தனது சாட்சியத்தில், அந்த நபர் தனது கூற்றை வலுப்படுத்த சில முதலீட்டாளர்களின் பெயர்களையும் இணையதளத்தையும் வழங்கியதாக கூறினார்.
அவர் தனது தொழிலில் இருந்து ஆண்டுக்கு 12 சதவீதம் சம்பாதிப்பதாகவும், பார்ட்னர்ஷிப் அங்கீகரிக்கப்பட்டால் நிகர லாபமாக 5 சதவீதம் பெறுவதாகவும் அவர் கூறியதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் அவர் வீசியது பொய்யான வலையில் விழுந்து அவரோடு கூட்டாளியாக பணியாற்ற ஒப்புக்கொண்டு ஒரு போலி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அதன் பிறகு அவர் தனது சொந்த நாட்டில் உள்ள தனது கணக்கிலிருந்து $2,50,000 அந்த நபருக்கு அனுப்பியுள்ளார்.
பணத்தைப் பெற்ற உடனேயே, குற்றம் சாட்டப்பட்டவர் தனது தொலைபேசியை Switch off செய்துள்ளார், இதனை அடுத்து அந்த பெண் அளித்த புகாரின் பெயரில் விசாரணை குழுவினர் அந்த நபரை கைது செய்தனர்.
கைதாகி தற்போது தண்டனை அனுபவித்து வரும் அவர் எந்த ஆசிய நாட்டை சேர்ந்தவர் என்பதை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.