UAE Tamil Web

ஆதரவற்ற 11 வயது இந்தியச் சிறுவனை மகன்போல வளர்த்து தொழிலதிபராக்கிய துபாய் அரசி – சுவாரஸ்ய வரலாறு..!

Uttamchand-Bhatia

அது 1920 ஆம் ஆண்டு துபாய். நல்ல வெயில். வெயிலைத்தவிர வேறொன்றுமில்லை. துபாய் அரண்மனைக்கு வெளியே நின்றிருந்த காவலர்கள் சாப்பாட்டிற்காக உள்ளே சென்றிருந்தார்கள். அப்போதுதான் அந்தச் சிறுவன் உள்ளே வந்தான். கிழிந்த ஆடைகள். வறுமைக்கோட்டில் தலைதட்டும் உயரம். சோர்ந்துபோன உடல். பசியால் நிரம்பிய வயிறு. கைகளில் பெரிய துணி மூட்டை.

பார்த்தவுடன் பரிவு பிறக்கும் நிலையில் இருந்த அந்த 11 வயது சிறுவன் தலைமேல் இருந்த மூட்டையுடன் கஷ்டப்பட்டு நிமிர்ந்து பார்த்தான். அரண்மனையின் மேலே நின்றிருந்த பணிப்பெண்கள் சிறுவனை பரிதாபமாகப் பார்த்தார்கள். அரசிக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது. “அழைத்துவாருங்கள்” என உத்தரவிட்டார் அரசி.

சிறுவயதில் பெற்றோரை இழந்த சிறுவர்கள் அனைவரும் வாழ்க்கையில் சாதிப்பார்களா தெரியாது. ஆனால் உலகில் சாதித்தவர்களில் பலர் இப்படி சொல்லிக்கொள்ள சொந்தம் என்று யாரும் இல்லாதவர்கள் தான். உத்தம்சந்த் துளசிதாஸ் பாட்டியா அந்த ரகத்தைச் சார்ந்தவன். ஒரு உதவி.. யாராவது.. எப்படியாவது.. துபாயில் தன் கொடியை உயரப் பறக்கவிடத் தயாராக இருந்தான் அவன்.

உனக்கு என்ன உதவி வேண்டும்? கேட்டது, துபாயின் எதிர்கால அரசரான ஷேக் சயீத் பின் மக்தூம் அல் மக்தூமின் மனைவியான ஷேக்கா ஹிஸ்ஸா பின்ட் அல் மூர். என்ன சொல்வதென்றே தெரியாமல் விழித்த பாட்டியாவிடம்,” நீ சொந்தமாக தொழில் துவங்கு” என அடுத்த அன்புக்கட்டளையை விதித்தார் மூர்.

கண்களை தாழ்த்திக்கொண்ட பாட்டியா,” என்னிடம் பணம் இல்லை” என்றான். அவனது குரல் தணிந்திருந்தது. அரசியிடமிருந்து ஒரு சிறிய புன்னகை மட்டுமே வெளிப்பட்டது. பாட்டியா இனி அரண்மனையிலேயே தங்குவான் என அறிவித்தார் மூர்.

“முதலில் நீ அரபி மொழி கற்றுக்கொள். உனக்கென்று நாங்கள் இருக்கிறோம்” என்றார் மூர். சத்தியத்தின் சாட்சியான அந்த வரிகள் பாட்டியாவை நெக்குருக வைத்தது. பின்னாளில் துபாயின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட அவரது மகன் ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் உடன் பாட்டியாவிற்கும் சேர்ந்தே அரபு மொழி போதனை நடத்தப்பட்டது.

வருடம் திரும்புவதற்குள் அரபு மொழியில் சரளமாக பேசக் கற்றுக்கொண்டான் உத்தம்சந்த். மொழி மட்டுமல்லாது நேர்மை, கணக்கு வழக்குகளைக் கையாளுதல் போன்றவற்றை அதிவேகமாக கற்று உயர்ந்தான்.

Uttamchand Bhatia with Sheikh Rashid Al Maktoum
Image Credit: Bhatia Family

துபாயின் முன்னாள் ஆட்சியாளர் ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் உடன் உத்தம்சந்த்

அன்றைய காலத்தில் துணி வியாபாரத்தில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்திவந்த பர் துபாயில் கால் பதித்தான் உத்தம்சந்த். அப்போது அவனுக்கு வயது 15. அதே துணி வியாபாரம் தான். தூக்கிவிட யாரவது வரமாட்டார்களா? எனக் காத்திருந்தவனுக்கு துபாயின் அரச குடும்பத்திலிருந்தே உதவி கிடைத்தால்? எப்படி இருந்திருக்கும். அசுரத்தனமான உழைப்பிற்கு ஆயத்தமானான் உத்தம்சந்த்.

இது ஒரு புறமிருக்கட்டும். அப்போதைய துபாயில் வணிகம் எப்படி இருந்தது எனச் சுருக்கமாக பார்த்துவிட்டு வருவோம். அந்தக்காலத்தில் அதாவது 1894 ஆம் ஆண்டு, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வியாபாரம் செய்ய வந்தவர்களின் கப்பல்கள் ஹோர்முஸ் பகுதியில் இருந்த லிங்கா ஜலசந்திக்குத்தான் வரவேண்டும்.

Boat
Image Credit: Bhatia Family

நூற்றுக்கணக்கான கப்பல்கள் தினசரி வந்துபோகும் இடம் அது. சொல்லப்போனால் மத்திய கிழக்கு நாடுகளின் வியாபாரம் துவங்கும் இடம். அதனை பணமாக்க நினைத்தார் ஹோர்முஸ் மன்னர். வியாபாரக் கப்பல்களுக்கு கடுமையான வரியை விதித்தார். இது வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அப்போதைய துபாய் ஆட்சியாளர் பெருமதிப்பிற்குரிய ஷேக் மக்தூம் பின் ஹஷேர் அல் மக்தூம் இந்தியர்களை துபாய்க்கு வியாபாரம் செய்ய வருமாறு அழைத்தார். இந்தியா – துபாய் இடையேயான வர்த்தகம் அந்தப் புள்ளியில் செழிக்கத் துவங்கியது.

கராச்சியில் இருந்த நாகர் தட்டா துறைமுகத்தில் இருந்து அமீரகத்திற்கு வியாபாரிகள் படையெடுக்கத் துவங்கினர். இருப்பினும் அந்தக் காலத்தில் துபாயுடன் ஒப்பிடுகையில் ஷார்ஜாவே வணிகத்திற்கு சிறந்த இடமாக அறியப்பட்டது. அங்கு அனைத்து வியாபாரிகளும் ஒன்றுகூடுவார்கள்.

Old
Image Credit: Pearls of Dubai (DTCM)

பின்னர் அங்கிருந்து ஒட்டகங்கள் மூலமாக அபுதாபிக்குப் பயணிப்பர். முன்னர் தபாய் என்றழைக்கப்பட்ட துபாய் இந்த வியாபாரிகளின் ஓய்வெடுக்கும் பிராந்தியமாக இருந்திருக்கிறது. 1920 களின் துவக்கத்தில் துபாயில் வர்த்தகம் செய்யுமாறு ஷேக் சயீத் வியாபாரிகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்தார்.

துபாய் கிரீக் பகுதியில் கடைகள் முளைக்கத் துவங்கின. இவற்றுள் பெரும்பாலானவை இந்தியர்களுடையது. ஆடைகள், அரிசு, கோதுமை, ஜாகிரி, மசாலாப் பொருட்கள் என வர்த்தகப் பொருட்கள் அதிகரித்தன.

இந்தக் காலகட்டத்தில்தான் உத்தம்சந்த் தனது 15 வது வயதில் துணிக்கடையை துவங்கியிருக்கிறார். அப்போதைய கடைகள் இரண்டடுக்கு கொண்டவைகளாக இருந்திருக்கின்றன. கீழே வியாபாரமும் மேலே தங்குமிடமும் கொண்ட சிறிய வீடுகள். அதில் துவங்கிய உத்தம்சந்த்தின் வர்த்தகப் பயணம் சில ஆண்டுகளிலேயே உச்சத்தைத் தொட்டது.

கதர் ஆடைகள், பட்டு உள்ளிட்டவற்றை பெருமளவு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து துபாயில் விற்பனை செய்தார் உத்தம்சந்த். அதேகாலகட்டத்தில் வளைகுடா நாடுகளில் முத்துக்களுக்கு கிராக்கி அதிகமிருந்தது. திறமையான வர்த்தகரான உத்தம்சந்த் அந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டார். ஈராக்கின் பஸ்ராவில் முத்துக்குளிப்பவர்களை சந்தித்து தரமான முத்துக்களை வாங்கி விற்பனை செய்யத் துவங்கினார். பின்னர், பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து முத்துக்கள் உத்தம்சந்த் வாயிலாக துபாய் சந்தைக்கு வரத் துவங்கின.

அன்றைய காலகட்டத்தில் ஷிண்டாகா பகுதியில் துபாய் அரச குடும்பத்தினர் மட்டுமே வசித்துவந்தனர். திருமணமான உடன் புதிய வீட்டிற்கு குடிபெயர நினைத்த உத்தம்சந்த்தை ஷிண்டாகாவில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும்படி அன்புக்கட்டளை வந்திருக்கிறது துபாய் அரசியிடமிருந்து.

NAT210305 DEEPAK BHATIA ARAMZAN13-1616671308642

மேலே நீங்கள் பார்ப்பதுதான் உத்தம்சந்த்தின் ஷிண்டாகா வீடு. அந்தக்கால துபாயில் குடிநீர் தட்டுப்பாடு மோசமாக இருக்குமாம். ஆகவே, ஒவ்வொரு வீட்டிற்கும் கிணறு தோண்டி குடிநீர் எடுத்துக்கொள்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இதில் ஆச்சர்யமான ஒரு விஷயம் சொல்கிறேன் கேளுங்கள். அப்போதைய காலகட்டத்தில் ஒரு கிணறுவெட்ட 1 ரூபாய் செலவாகுமாம். கிணற்றில் நீர் வற்றிவிட்டால் வேறு இடத்தில் கிணறு தோண்ட வேண்டும்.

USE ONLY FOR DEEPAK BHATIA STORY_well-digging work in progress in Dubai

ஈராக்கிலிருந்து மண்ணெண்ணெய் டின்களில் தண்ணீர் இறக்குமதியும் பெருமளவில் நடந்திருக்கிறது. துபாய் வளர வளர உத்தம்சந்த்தின் வளர்ச்சியும் அதற்கு இணையாக அதிகரித்திருக்கிறது. துணி வியாபாரம் மற்றும் முத்துக்கள் விற்பனை என வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தார் உத்தம்சந்த்.

அமீரகம் உருவாவதற்கு முன்பு துபாய் தனி நாடாக அறியப்பட்ட காலத்தில் உத்தம்சந்த் மிகப்பெரிய செல்வந்தராக உயர்ந்திருக்கிறார்.

பழமை மாறா நட்பு

பின்னாளில் ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் துபாயின் ஆட்சியாளராக முடிசூடிய பின்னரும் உத்தம்சந்த் உடனான அவரது நட்பு தொடர்ந்திருக்கிறது. ஒரு சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள்.

துபாய் ஆட்சியாளர் அலுவலகத்திற்கு அருகே தான் உத்தம்சந்த்தின் கடையும் இருந்திருக்கிறது. மஜ்லிஸ் எனப்படும் உயர்மட்ட அதிகாரிகள் சந்திப்புக் கூட்டங்களில் உத்தம்சந்த்தும் இருக்கவேண்டும் என ஷேக் ரஷீத் உத்தரவிடுவார்.  சில நாட்கள் கூட்டங்களுக்கு உத்தம்சந்த் வரவில்லை எனில், ஏன் வரவில்லை எனக் கேட்டு ஆளை அனுப்பிவிடுவார்.

ஒருமுறை, “அரசாங்க விஷயங்களில் நான் தலையிடுவது நம்முடைய நட்பை பாதிக்கும் என நினைக்கிறேன். ஆகவே நான் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை” என உத்தம்சந்த் தெரிவிக்க அதனை ஷேக் ரஷீத் ஏற்றுக்கொண்டாலும் வாழ்வின் இறுதிக்கணம் வரையிலும் உத்தம்சந்த் உடனான நட்பை அவர் விட்டுக்கொடுக்கவே இல்லை.

USE ONLY FOR DEEPAK BHATIA STORY_Uncle Shop

1954 ஆம் ஆண்டு துபாய் முனிசிபாலிட்டி கடைகளுக்கு பெயர் வைக்கவேண்டும் என கடை உரிமையாளர்களை கேட்டுக்கொண்டது. அப்போது உத்தம்சந்த் தனது துணி வர்த்தக மையத்திற்கு அங்கிள்ஸ் ஷாப் (Uncle’s Shop) எனப் பெயரிட்டிருக்கிறார். அந்தப் பெயருக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.

உத்தம்சந்த்தின் வீட்டிற்கு ஷேக் ரஷீத் அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது உத்தம்சந்த்தின் குழந்தைகள் ஷேக் ரஷீத் அவர்களை அங்கிள் என்று அழைப்பார்கள். அதன் நினைவாகவே தனது கடைக்கும் அந்தப் பெயரைச் சூட்டியிருக்கிறார் உத்தம்சந்த்.

துபாய் அரச குடும்பத்தினர் பலருடன் நெருங்கிப் பழகினாலும் தனக்கே உரித்தான நேர்மையுடன் வணிகத்தை மேம்படுத்தியிருக்கிறார். அதன்காரணமாகவே அவரது நான்காம் தலைமுறையைச் சேர்ந்த யாஷ் இன்றும் துபாயில் தனது முன்னோரின் வர்த்தகத்தை முன்னின்று நடத்திவருகிறார்.

20210428 Bhatia family

உத்தம்சந்த் மற்றும் அவரது மனைவி சாவித்திரி தேவி 

உத்தம்சந்த் பிறந்தபோதே, அவரது தயார் மரணத்துவிட்டார். 3 வயதில் தந்தை, அதன்பிறகு பிளேக் என்னும் பெருநோய் காலத்தில் தன்னுடன் பிறந்த 5 சகோதரர்களையும் உத்தம்சந்த் இழந்திருக்கிறார். சொல்லிக்கொள்ள யாருமில்லை என்ற நிலையில் தனது தூரத்துச் சொந்தமான லால்சந்த் தோசாணி என்பவரின் உதவியாளராக துபாய்க்கு வந்தவர் உத்தம்சந்த்.

துபாய்க்கு வந்த ஆரம்ப காலத்தில் போட்டுக்கொள்ள நல்ல உடைகளோ, ஒரு வேளை உணவோ கூட கிடைக்காமல் கண்ணீருடன் காத்திருந்ததாகவும் உத்தம்சந்த் பிற்காலத்தில் பல இடங்களில் கூறியிருக்கிறார்.

கடின உழைப்பும் நேர்மையும் இருந்தால் வெற்றுமணல் பிரதேசத்திலும் பூலோக சொர்க்கத்திற்கு சக்கரவர்த்தியாக மாறலாம் என்பதற்கு உத்தம்சந்த் துளசிதாஸ் பாட்டியாவின் வாழ்க்கை சாட்சியாக நிற்கிறது.

துபாய் வர்த்தக சாம்ராஜ்யத்தில் 100 ஆண்டுகளாக பாட்டியா குடும்பத்தின் கொடி உயரப் பறக்கிறது. இதற்குக் காரணமான உத்தம்சந்த் பாட்டியா மே 18, 1986 ஆம் ஆண்டு துபாயிலிருந்து இந்தியா திரும்பிய போது மாரடைப்பால் மரணமடைந்தார். அவருடைய உடல் அவரது விருப்பப்படியே இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டது.

USE ONLY FOR DEEPAK BHATIA STORY_Four generations of Bhatias

முதலில் (கடிகாரச்சுற்றில்) உத்தம்சந்த் பின்னர் அவரது மகன் விஜய், யாஷ் மற்றும் யாஷின் தந்தை தீபக்.

இன்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை தங்களது பொக்கிஷமாக கருதுகின்றனர் பாட்டியா குடும்பத்தினர். உண்மையில் எத்தனை தடைகள் வந்தாலும் அதனைத் தகர்க்க நம்மால் முடியும் என்ற உத்தம்சந்த்தின் வாழ்க்கை தான் உண்மையில் பொக்கிஷம்.

Uttamchand-Bhatia
81 Shares
Share via
Copy link