துபாயில் உள்ள கார் உரிமையாளர்கள் உங்களது வாகனத்தை பிறருக்கு குறிப்பாக ஓட்டுனர் உரிமம் பெறாத நபர்களிடம் ஓட்ட அனுமதிக்க வேண்டாம் என பொது வழக்குத்துறை எச்சரித்திருக்கிறது.
சமீபத்தில் துபாயைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், தனது தந்தை தூங்கிக்கொண்டிருந்த வேளையில் அவரது காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றிருக்கிறான். போக்குவரத்துக்கு எதிர் திசையில் பயணித்த அச்சிறுவன் வேறொரு காரின் மீது மோதியதால், அந்தக் காரில் சுற்றுலா சென்றுகொண்டிருந்த குடும்பத்தினர் படுகாயமடைந்தனர்.
இதனைச் சுட்டிக்காட்டிய பொது வழக்குத்துறை, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவது குற்றம் எனத் தெரிவித்துள்ளது. மேலும் அமீரக போக்குவரத்து சட்டப்படி, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கினால் அல்லது குறிப்பிட்ட வகையான வாகனங்களை இயக்க உரிமம் பெற்று வேறு விதமான வாகனங்களை இயக்குபவர்களுக்கு 3 மாத சிறைத்தண்டனை அல்லது 5.000 திர்ஹம்ஸ் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என பொது வழக்குத்துறை எச்சரித்திருக்கிறது.
