ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல தூக்கம் முக்கியமானது தான். ஆனால் அதற்காக வேலைபார்க்கும் இடத்திலெல்லாம் தூங்கினால் வேலைக்கு வேட்டு வைத்துவிடுவார்கள். அப்படி, கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி, மும்பையில் இருந்து அபுதாபிக்கு கிளம்ப இருந்த இண்டிகோ A320 கார்கோ விமானத்தில் சரக்குகள் ஏற்றும் பணிகள் முடிவடைந்தவுடன் விமானத்தை இயக்க, விமானி ரெடியாகியிருக்கிறார்.
விமானமும் டேக் ஆஃப் ஆன பிறகுதான், விமானத்தில் சரக்குகளை அடுக்கிய ஊழியர் ஒருவரைக் காணவில்லை என மும்பை விமான நிலையத்தில் தெரியவந்திருக்கிறது. அந்த காணாமல் போன ஊழியர், விமானத்தின் கம்பார்ட்மென்ட் 1 ல் சரக்குப் பெட்டிகளுக்குப் பின்னால் படுத்து தூங்கியிருந்திருக்கிறார். விமானம் கிளம்பிய பிறகே அவருக்கு என்ன நடக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது.
நடுவானில் என்ன செய்ய முடியும்? விமானம் அபுதாபியில் தரையிறங்கியதும் பயணத்தில் சயனித்த ஊழியரை மீண்டும் மும்பைக்கு அனுப்பியிருக்கிறார்கள் அபுதாபி விமான நிலைய அதிகாரிகள்.
இதுகுறித்து விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன இருந்தாலும் விமானம் கிளம்பியது கூடத் தெரியாமல் தூங்குவது கொஞ்சம் ஓவர் தான்..