UAE Tamil Web

அபுதாபி நகரத்தை வடிவமைத்த தலைமைப் பொறியாளர் 98 வயதில் மறைவு..! – யார் இவர்?

அபுதாபி. விண்ணை முட்டும் கட்டிடங்கள், அசாத்திய தொழில்நுட்ப வளர்ச்சி, உலகத்தரத்திலான சாலைகள், காண்போரை கவரும் சுற்றுலாத் தளங்கள் என மனதை கொள்ளைகொள்ளும் நகரங்களில் ஒன்று. ஆனால் 50 வருடங்களுக்கு முன்னால் அபுதாபியின் நிலையே வேறு.

வளர்ச்சி அப்போதுதான் முகம்காட்டத் துவங்கியிருந்தது. இருப்பினும் அபுதாபியை ஒரு சிறந்த நகரமாக கட்டமைக்கும் ஆசை அபுதாபியின் முன்னாள் ஆட்சியாளரும் அமீரகத்தின் முன்னோடிகளில் ஒருவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களுக்கு இருந்தது. சொல்லப்போனால் அவருடைய கனவு அது.

sheikh zayeed

அப்போதுதான் டாக்டர். அப்துல் ரஹ்மான் மக்லோஃப் (Dr Abdulrahman Makhlouf) அவர்களை வரவழைத்து அபுதாபி கட்டுமானம் குறித்துப் பேசியிருக்கிறார் ஷேக் சயீத். சவூதி அரேபியாவில் கட்டுமானப் பணியினை மேற்கொண்டுவந்த மக்லோஃப் அதனை முடித்த கையோடு ஷேக் சயீத்தின் அழைப்பை ஏற்று அபுதாபி வந்திருக்கிறார். வருடம் 1968 அக்டோபர்.

இன்று டாக்டர். அப்துல் ரஹ்மான் மக்லோஃப் (Dr Abdulrahman Makhlouf) தனது 98 வது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

முன்பே கூறியதுபோல், 1968 அக்டோபர் மாதத்தில் அபுதாபி வந்திறங்கிய மக்லோஃப் அதன்பிறகு இறுதிவரையில் இங்கேயே இருந்திருக்கிறார்.

யார் இவர்?

எகிப்தில் பிறந்த மக்லோஃப், அங்குள்ள கெய்ரோ பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலையில் (Architecture) பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின்னர் ஜெர்மனியில் பயின்ற இவர் கட்டிடக்கலையில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக சவுதியில் உள்ள மெக்கா, மெதினா மற்றும் ஜித்தா ஆகிய நகரங்களில் கட்டுமானப் பணிகளில் பணியாற்றிவந்த மக்லோஃப்-ற்கு ஐநா அதிகாரிகளிடம் இருந்து ஒரு தகவல் வருகிறது.

அபுதாபி நகர கட்டுமான வேலைகளைத் திட்டமிட ஷேக் சயீத் தகுந்த நபரை வேண்டுவதாகவும் அவரை உடனடியாக சந்திக்கும்படியும் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

abudhabi
Twenty five years separate these photographs of Sheikh Khalifa Street. Victor Besa/The National.

ஜெனிவாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் முதன்முதலில் ஷேக் சயீத் – மக்லோஃப் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. இதுகுறித்து மக்லோஃப் பேசுகையில்,” முதலில் அபுதாபி நகர நிர்வாகத்தை ஜப்பானிச் சேர்ந்த கட்சுஹிகோ தகஹாஷி என்பவர் திட்டமிட இருந்தார். பின்னர் அப்பணி எனக்கு ஒதுக்கப்பட்டது. நான் கோட்-சூட் அணிந்துகொண்டு ஷேக் சயீத்தை காணச் சென்றேன். என்னைக் கண்டதும் என்னுடன் கைகுலுக்கியவர் அருகிலிருந்தவரிடம் ‘யார் இவர்’ எனக் கேட்டார். அதற்கு அருகில் இருந்தவர் அபுதாபி நகர நிர்வாகத்தை திட்டமிட வந்திருப்பவர் எனக் கூறினார். அதன்பிறகு நாங்கள் பலமுறை சந்தித்து பேசி திட்டங்களை வகுத்தோம்” என்றார்.

“அபுதாபிக்கு ஒரு தலைநகரம் வேண்டும். அதுவும் உடனடியாக. எத்தனை சீக்கிரத்தில் முடியுமோ அத்தனை விரைவில்” என அன்புக் கட்டளையிட்டிருக்கிறார் ஷேக் சயீத்.

அதன்படி கடுமையாக உழைத்த மக்லோஃப் அமெரிக்காவின் மான்ஹெட்டன் நகரத்தினைப் போன்று பல நவீன அம்சங்கள் கொண்ட நகரமாக அபுதாபியை வடிவமைத்திருந்தார் மக்லோஃப்.

bulding
Page 1/6 of book by Dr. Abdul Rahman Makhlouf who was a close friend of Sheikh Zayed and had planned Abu Dhabi. Victor Besa/The National.

காஸிர் அல் பஹார் மாளிகையின் தரையில் அமர்ந்து அபுதாபியின் இறுதிகட்ட வரைபடத்தை ஷேக் சயீத்திடம் காட்டினார் மக்லோஃப். (மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படம்) அவருக்கும் அது பிடித்திருந்தது. அதற்குப் பிறகு நடந்தவை எல்லாமே சரித்திரமாகிப்போன சம்பவங்கள்.

அபுதாபியின் ஒவ்வொரு அம்சத்தையும் தேடித்தேடி வடிவமைத்த மகத்தான வடிவமைப்பாளர் இன்று தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டார். எத்தனை ஆண்டுகாலம் ஆனாலும் அபுதாபி உள்ளவரை மக்லோஃப் அவர்களின் பெயரும் உலகத்தால் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படும்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap