UAE Tamil Web

கோவை விமான நிலையத்தில் ஏப்ரல் முதல் இரவு நேர விமான சேவை கிடையாது!

கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஓடுதள பாதை சீரமைப்பு பணிகள் துவங்க உள்ளதால், ஏப்ரல் மாதம் முதல் இரவு நேர விமான சேவை நிறுத்தப்பட உள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது ஓடுதள பாதை, 9,500 அடி நீளமும், 148 அடி அகலமும் கொண்டுள்ளது. ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறையும் இதன் ஓடுதள பாதை சீரமைப்புபணி மேற்கொள்ளப்படும்.

இதன்படி கோவை விமான நிலைய ஓடுதள பாதை நடப்பாண்டு சீரமைக்கப்பட உள்ளது. இதற்காக ஏப்ரல் மாதம் முதல் கோவை விமான நிலையத்தில் இரவு நேர விமான சேவை நிறுத்தப்பட உள்ளது.

இது குறித்து விமானநிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘ஓடுதள பாதை சீரமைப்பு பணிகள் ஏப்ரல் மாதம் முதல் துவங்கப்படுகிறது. விமான இயக்கம் இல்லாத நேரத்தில் இந்த பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் விமான சேவை மற்றும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இந்த சீரமைப்புபணி காரணமாக ஏப்., மாதம் முதல் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை எவ்வித விமான சேவையும் இருக்காது.

கோவை – சிங்கப்பூர் விமான சேவை வரும் 27 முதல் தினசரி துவங்கப்பட உள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொரோனா பரவல் காரணமாக, 2020ஆம் ஆண்டு துவக்கம் முதல் வெளிநாடுகளுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததும் கோவை – ஷார்ஜா விமான சேவை துவங்கியது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap