UAE Tamil Web

“தேசத்திற்காக உயிரை கொடுத்தவர்களின் தியாகங்கள், எங்களது மார்பை அலங்கரிக்கும் பெருமைக்குரிய பதக்கங்கள்”- நினைவு நாளையொட்டி அமீரக தலைவர்கள் புகழஞ்சலி…

leaders

அமீரகத்தின் பாதுகாப்பு, புகழை நிலைநாட்ட தங்களது இன்னுயிரை ஈந்தவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் அமீரகத்தில் நினைவு நாள்(தியாகிகள் தினம்) அனுசரிக்கப்பட்டு வருகிறது.

- Advertisment -

சிவில், ராணுவ மற்றும் மனிதாபிமான சேவைத் துறைகளில் அமீரகம் மற்றும் வெளிநாடுகளில் தங்கள் உயிரை கொடுத்த எமிராட்டி தியாகிகளின் தியாகங்களையும், அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

நன்றியுடன் நினைவில் கொள்வோம்..

இந்நிலையில் தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் அமீரக தலைவர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக அஞ்சலி செய்தி தெரிவித்துள்ள நாட்டின் ஜனாதிபதியான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான், ‘சத்தியம், கடமை மற்றும் மீட்பிற்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த அமீரக தேசத்தின் மகன்களை தேசத்தைப் பாதுகாப்பதில், அதன் இறையாண்மையைப் பாதுகாப்பதில், மற்றும் அதன் சாதனைகளைப் பாதுகாப்பதில் என நாட்டிற்காக உயிர் தந்த தியாகிகளை எப்போதும் பாராட்டுடனும் நன்றியுடனும் நினைவில் கொள்வோம்’என உறுதி கூறியுள்ளார்.

மேலும் அமீரக மகன்களின் தியாகங்கள் “பெருமைக்குரிய பதக்கங்கள்”. அவை “எங்கள் மார்புகளையும் எங்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளை அலங்கரிக்கும்” என்று ஷேக் கலீஃபா பெருமிதம் தெரிவித்துள்ளார். நாட்டின் தியாகிகளின் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அவர்கள் அரசிடமிருந்து மிக உயர்ந்த பராமரிப்பு ஆதரவை பெறுவார்கள் என்றுள்ளார்.

மக்களின் மனசாட்சியாக இருப்பார்கள்: துபாய் ஆட்சியாளர்

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், “அமீரக தியாகிகள் வரவிருக்கும் தலைமுறைகளின் நினைவாகவும், அமீரக மக்களின் மனசாட்சியாகவும் உயிருடன் இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

வெளிச்சம் தரும் நட்சத்திரங்கள்: அபுதாபி இளவரசர்

அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமை துணைத் தளபதியும், அபுதாபி நிர்வாகக் குழுவின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேசபக்தியின் காலமற்ற அடையாளங்களாக இருப்பதால் ஆண்டுகள் கடந்தும் தியாகிகளின் பெருமை அதிகரிக்கின்றது. அவை நம் வரலாற்றை பெருமையுடனும் அலங்கரிக்கின்றன’ என்று கூறியுள்ளார்.

நினைவு தினத்தை முன்னிட்டு நாட்டின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள சயீத் அல் நஹ்யான், தியாகிகள் நமது தற்போதைய மற்றும் எதிர்காலத்திற்கு வெளிச்சம் தரும் நட்சத்திரங்களைப் போன்றவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

வீரர்களுக்கு பெருமையுடன் நன்றி: அஜ்மான் ஆட்சியாளர்

அமீரகம் தனது தியாகிகளின் சாதனைகள் மற்றும் தியாகங்களை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30-ஆம் தேதி, நினைவுகூர்கிறது என்று உச்ச சபை உறுப்பினரும், அஜ்மானின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹுமைத் பின் ரஷீத் அல் நுவைமி தெரிவித்துள்ளார். தங்கள் தாயகத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு, மக்களின் இதயங்கள் பெருமையுடன் நன்றி கூறும் நாள் இது என குறிப்பிட்டுள்ளார்.

தியாகங்களால் மட்டுமே தேசங்கள் உயரும்: புஜைரா ஆட்சியாளர்

தேசங்கள் தங்கள் மக்களின் தியாகங்களின் மூலம் மட்டுமே உயர்கின்றன என்று கூறியுள்ள புஜைரா ஆட்சியாளர் ஷேக் ஹமாத் பின் முகமது அல் ஷர்கி,குடிமக்களால் மட்டுமே நாடுகளை கட்டமைக்க முடியும் என்றார். இந்த தருணத்தில் தேசத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த நாட்டின் தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

துணிச்சல் தியாகிகள் எப்போதும் நினைவில் இருப்பார்கள்: உம் அல் குவைன் ஆட்சியாளர்

உம அல் குவைன் ஆட்சியாளரான ஷேக் சவுத் பின் ரஷீத் அல் முஅல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமீரகத்தின் தலைமையும், மக்களும் தேசத்தின் மண், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை காக்க உயிரை தந்த துணிச்சலான தியாகிகளை எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள். எங்கள் தியாகிகள் தேசிய வரலாற்றின் பக்கங்களிலும், எங்கள் இதயங்களிலும் முன்னணியில் இருப்பார்கள்’என்று கூறியுள்ளார்.