முதலில் பொருட்களை விற்க சொல்லி, பிறகு அதே பொருட்களை திருட சொன்ன நிறுவனம்.!

thives got arrested

ஷார்ஜாவின் கிழக்கு பகுதியின் கட்டுமானத்தில் உள்ள கட்டிடங்களுக்கு (Under-construction buildings) மின் கேபிள்கள் மற்றும் பிற மின்சார பொருட்களை விநியோகம் செய்த நிறுவனமானது, அதே பொருட்களை திருட, நியமிக்கப்பட்ட மூன்று ஆசிய ஆண் ஊழியர்களை ஷார்ஜா போலீசார் கைது செய்துள்ளனர்.

கிழக்கு பகுதி காவல் துறையின் இயக்குனர் கர்னல் அலி அல்கி அல் ஹமூடி (Colonel Ali Alki Al Hamoudi) கூறுகையில் உரிமையாளர்கள் போலீசாரிடம் திருட்டு குறித்து புகார் தெரிவிக்காத நிலையிலும் ஷார்ஜா காவல்துறையினர் இந்த மோசடிகளை முறியடித்துள்ளனர் என்கிறார்.

கட்டுமானத்தில் உள்ள கட்டிட மண்டலத்தில் இருந்து அந்த மூன்று ஆசியர்களும் ஒரு பெரிய, கனமான பையை எடுத்துச் சென்றதை திபா அல் ஹிஸ்ன் காவல் நிலையத்தின் ரோந்துப் பணியிலுள்ள போலீசார் கண்டுள்ளனர். பின்னர் அவர்களை தடுத்தி நிறுத்தி, அந்த பையில் உள்ள பொருளைப் பற்றி போலீஸார் விசாரித்ததும், தங்களுக்கு ஆங்கிலமோ அரபியோ பேச தெரியாது என பாசாங்கு செய்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அம்மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு காவலர்களின் “பாணியில்” விசாரணை நடந்துள்ளது. அதில் “மின்சார இணைப்புக் கருவிகளைக் கையாண்ட எங்கள் நிறுவனமானது, கட்டுமானத்தில் உள்ள தளங்களுக்கு பொருட்களை வழங்குவதோடு, நிறுவன ஊழியர்களால் அதே பொருட்களை திருடவும் வைத்தது. இதன் பின்னர், கட்டுமானத்தில் உள்ள கட்டிடங்களின் (Under-construction buildings) உரிமையாளர்கள் அந்த பொருட்கள் திருடப்பட்டதாக தெரிவிப்பார்கள். மீண்டும் எங்கள் நிறுவனத்திடமிருந்து பொருட்களை வாங்குவதற்காக இந்த நாடகம் அரங்கேறியது. எங்கள் நிறுவனம் நீண்ட காலமாக இதைச் செய்து வருகின்றது.” என்று அவர்கள் உண்மையை போலீசாரிடம் கூறியுள்ளார்கள். கட்டிடத்தின் உரிமையாளர்கள், தங்கள் அறியாமையினால், பொருட்கள் திருடப்பட்டதை போலீசில் புகாரளிக்காமல் இந்த மோசடி நிறுவனத்திடமிருந்து மீண்டும் மீண்டும் பொருட்களை வாங்கிக் கொண்டே இருந்ததும் தெரியவந்துள்ளது. பிறகு அந்த மூவரும் தடுத்து வைக்கப்பட்டு பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டனர்.

கட்டுமான வசதிகளின் உரிமையாளர்களுக்கு, இத்தகைய குற்றங்களுக்கு பலியாக வேண்டாம் என்றும், அவர்கள் கையாளும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தன்மையை சரிபார்க்க தவற வேண்டாம் என்றும் ஷார்ஜா காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய நூதன திருட்டுகளைத் தடுக்க, உரிமையாளர்கள் கட்டுமானப் பொருட்கள் மற்றும் மின்சாரப் பொருட்களை ஒரு காவலரால் பாதுகாக்க வேண்டும் என்று காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

Loading...