அமீரகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா வைரஸ்.. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 248 ஆக உயர்வு..!

corona
Image Credits- Khaleej Times

அமீரகத்தில் கொரோனா வைரஸால் மேலும் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதன் மூலம் அமீரகத்தில் 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். (தற்போது வரை)

பாதிக்கப்பட்ட 50 நபர்களும் ஏற்கனவே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஆவார்கள்.

தற்போதுள்ள புதிய நோயாளிகள் பின்வரும் நாட்டைச் சேர்ந்தவர்கள். இலங்கை, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஏமன், துனிசியா, தென்னாப்பிரிக்கா, பெல்ஜியம், தென் கொரியா, பல்கேரியா, பிரான்ஸ், செக் குடியரசு, ஆஸ்திரேலியா, லெபனான், கென்யா, மாலத்தீவு, சூடான், ஈரான், அயர்லாந்து, மொராக்கோ, பாகிஸ்தான் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒருவரும், இத்தாலி, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்பெயின், நெதர்லாந்து, ஜோர்டான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து தலா இருவரும், அமெரிக்கா, பங்களாதேஷ் மற்றும் பாலஸ்தீனத்திலிருந்து தலா மூவரும், இந்தியாவில் இருந்து ஆறு நோயாளிகளும் உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் உடல் நிலை சீராக உள்ளது மற்றும் தேவையான மருத்துவ சேவையைப் பெறுகிறார்கள்.

மேலும், இதற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் குணமடைந்துள்ளனர். இவர்களில் மூவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர் ஆவார். (இதன் மூலம் அமீரகத்தில் கொரோனா வைரஸால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.)

சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுதல், இருமல் மற்றும் தும்மும் போது மூக்கு மற்றும் வாயை மூடுவது போன்ற செயல்களின் மூலம் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான ஆரோக்கியமான நடைமுறைகளை கடைபிடிக்குமாறு அமைச்சகம் மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

சுவாச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களைத் தவிர்க்கவும் அமைச்சகம் அறிவுறுத்தியது. அதிகாரப்பூர்வ தளங்களில் உள்ள உண்மையான ஆதாரங்களை மட்டும் நம்ப வேண்டும் எனவும் வீண் வதந்திகள் பரவுவதைத் தவிர்க்கவும் மக்களை வலியுறுத்தினர்.

Loading...