UAE Tamil Web

தேசிய தினம் முதல் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் என அடுத்தடுத்து காத்திருக்கும் விழாக்கள்.! கட்டுப்பாடுகளை அறிவித்த அமீரக அதிகாரிகள்..

festivals

அமீரக தேசிய தினம் உட்பட வரவிருக்கும் பல பண்டிகைகளுக்கு மத்தியில் கோவிட் -19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

- Advertisment -

அனைவரும் ஏற்கனவே இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். கூட்டங்கள் அல்லது அணிவகுப்புகளை நடத்தக்கூடாது. தொலைதூர டிஜிட்டல் கொண்டாட்டங்களை மட்டுமே நடத்த விதிகள் பரிந்துரைக்கின்றன. தனியார் கூட்டங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. எந்தவித கொண்டாட்டங்களுக்காகவும் எந்த கூட்டங்களுக்கும் அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் சைஃப் அல் தஹேரி கூறுகையில், ‘அமீரக தேசிய தினம், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நெருங்கி வருவதால், கோவிட் -19 தொற்றை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளிலும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்’என்றார்.

மேலும் பேசிய அவர் அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெற்ற பின் மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தால் மட்டுமே நிகழ்ச்சிகளை நடத்த முடியும். பணியிட கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன. வானவேடிக்கை போன்ற நிகழ்ச்சிகளை கூட்டமாக காண அனுமதி இல்லை என்றார்.

கொண்டாட்டங்களை நடத்துவதற்கான விதிகள் பொது சுகாதாரம், சமூக இடைவெளி, ஒழுங்குமுறைகள் மற்றும் கொள்கைகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், சுத்திகரிப்பு மற்றும் தூய்மை உள்ளிட்ட 5 அடிப்படை பகுதிகளை உள்ளடக்கியது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். பொது சுகாதார அம்சம் பற்றி விரிவாக கூறிய அல் தஹேரி, முகக்கவசங்களை அணிய வேண்டும், அங்கீகரிக்கப்பட்ட பொழுதுபோக்கு இடங்களில் தேவையான வெப்பநிலை சோதனைகளை மேற்கொள்ள வேண்டும், தனிப்பட்ட சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும், பொழுதுபோக்கு இடங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் குறித்த பயிற்சி அளிக்க வேண்டும், உணவு மற்றும் பானங்கள் பரிமாறும் போது தேவையான தடுப்பு நடவடிக்கைகளை பயன்படுத்த வேண்டும் என்றார்.

மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும் நிகழ்ச்சிகளை முன் ஒப்புதல் இல்லாமல் நடத்த முடியாது. அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு, ஒரு நியமிக்கப்பட்ட ஊழியர் அந்த இடத்தில் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.