fbpx
20.3 C
Dubai
November 25, 2020
UAE Tamil Web

கொரோனா தடுப்பூசி குறித்த ரகசியத்தை வெளியில் சொன்ன அமீரக மருத்துவருக்கு நேர்ந்த கதி..

VaccineTrial

கொரோனாவிற்கான தடுப்பூசி குறித்த மூன்றாம் கட்டத்தின் ஆய்வுகள் அமீரகத்தில் அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கும் குரூப் 42 மற்றும் சீனாவின் மருந்தகத் துறை ஜாம்பவானான சினோபார்ம் (Sinopharm) ஆகியவை இணைந்து மேற்கொண்டுவருகின்றன.

கொரோனாவினால் பாதிக்கப்பட அதிகமான வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு இத்தடுப்பு ஊசியை அளிக்க அமீரக அரசு சமீபத்தில் அனுமதியளித்தது.

இதன் நீட்சியாக அபுதாபி பள்ளி ஆசிரியர்கள், ஷார்ஜா விமான நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டிருக்கிறது. அமீரகத்தின் முக்கிய தலைவர்கள் பலருக்கும் இந்த கொரோனா தடுப்பு மருந்தானது அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இன்று செலுத்தப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

ரகசியம்

அமீரகத்தில் நடைபெற்றுவரும் இந்த கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் குறித்த ரகசியத் தகவல்களை வெளியிட்டதாக அபுதாபி சுகாதார நிறுவனத்தில் பணியாற்றிவந்த மருத்துவரை பணி இடைநீக்கம் செய்திருக்கிறது சுகாதாரத்துறை.

கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டது குறித்தும் அவரது அடுத்தடுத்த நோய் எதிர்ப்பு சக்தி முடிவுகள் குறித்தும் வீடியோ ஒன்றில் மருத்துவர் பேசியிருக்கிறார். அமீரக சட்டங்கள், மருத்துவ பரிசோதனை விதிமுறைகள் மற்றும் ரகசியத்தன்மை வாய்ந்த ஒப்பந்தங்களை மீறியதாக அந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது அரசு. இம்மருத்துவரின் மருத்துவ உரிமத்தை தற்காலிகமாக தடை செய்வதாக சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.

“உலகளாவிய சுகாதார வழிமுறைகளின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எந்தவொரு விஞ்ஞான ஆராய்ச்சிகளைப் போலவே, மருத்துவ ஆராய்ச்சிகளில் பங்கேற்போரும் இரகசிய ஒப்பந்தங்களுக்கு உட்பட்டவரே. சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆய்வுகள் குறித்த தகவல்களை வெளியிட அனுமதி அளித்தாலொழிய தனிப்பட்டவர்கள் இவற்றை வெளியிடக்கூடாது” என சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.



error: Alert: Content is protected !!