37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

விசிட் அல்லது சுற்றுலா விசாவில் துபாய் வருவதற்கு எப்படி விண்ணப்பிப்பது? – படிப்படியான வழிமுறைகள்.!

uae-visa_

துபாயில் உள்ள வெளியுறவுத்துறை மற்றும் குடியிருப்பாளர்களுக்கான தலைமை இயக்குனரகம் (GDRFA) புதிய விசிட் மற்றும் சுற்றுலா விசாக்களை வழங்கத் துவங்கியிருக்கிறது. அனைத்து நாட்டினரும் விசிட்/சுற்றுலா விசாக்கள் மூலமாக துபாய்க்கு வரலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

துபாய் விசா சம்பந்தமான அனைத்து சேவைகளையும் அமர் மையங்கள் மேற்கொண்டுவருகின்றன. விசிட் மற்றும் சுற்றுலா விசாவில் துபாய் வரவிருப்போர் சுற்றுலா ஏஜென்சிக்களை அணுகுமாறு அமர் மையங்கள் தெரிவித்திருக்கின்றன.

எப்படி விண்ணப்பிப்பது?

நீங்கள் துபாய் வர, உங்களுடைய நாடு – அமீரகம் இடையே வழக்கமான விமான சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை உங்களுடைய நாட்டில் கொரோனா காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை நீட்டிக்கபட்டிருந்தால் உங்களுடைய நாட்டிலிருந்து அமீரகத்திற்கு வழக்கமான விமான சேவைகள் மீண்டும் துவங்கப்படும் வரையில் காத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் துபாய்க்கு வருவதற்கு மட்டுமே விசிட் மற்றும் சுற்றுலா விசாக்கள் வழங்கப்படுகின்றன. விசா கோரி விண்ணப்பிப்பதற்கு கீழ்க்கண்ட சான்றிதழ்கள் அவசியம்.

  • விசா விண்ணப்பதாரருடைய பாஸ்போர்ட் நகல்
  • வெள்ளை பின்புறத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்
  • சில குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்படலாம்.
  • நீங்கள் அமீரக குடியிருப்பாளராக இருந்து, உங்களுக்கு வேண்டியவருக்கு விசிட் / சுற்றுலா விசா கோரி விண்ணப்பித்தால் சில ஏஜென்சிக்கள் உங்களுடைய விசா மற்றும் பாஸ்போர்ட் நகல்களை சமர்ப்பிக்கச் சொல்லலாம்.

30 அல்லது 90 நாட்களுக்கான விசா விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. பெரும்பாலான ஏஜென்சிக்கள் விதிக்கும் விசாவிற்கான கட்டணத்தில் கொரோனா நோய்க்கு உட்பட்ட காப்பீடும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

30 நாட்களுக்கான விசாவிற்கு 450 திர்ஹம்ஸ் கட்டணமும், 90 நாட்களுக்கான விசாவிற்கு 1,100 திர்ஹம்ஸ் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. (ஏஜென்சிக்களைப் பொறுத்து இந்த கட்டணத்திலும் வேறுபாடுகள் இருக்கலாம்.) பயணிகள் விசா கட்டணத்தை செலுத்துவதற்கு முன்னர், மருத்துவ காப்பீடு விசா கட்டணத்தில் அடங்குமா போன்ற விபரங்களை தெரிந்துகொள்வது நல்லது.

GDRFA அனுமதி தேவையா?

துபாய் வருவதற்கான விசிட்/சுற்றுலா விசாக்கள் GDRFA வினால் வழங்கப்படுவதால் தனியாக GDRFA விடம் அனுமதிபெற வேண்டிய அவசியம் இருக்காது.

உங்களுடைய விசா விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட 2 அல்லது 3 வேலை நாட்கள் ஆகலாம். சில ஏஜென்சிக்கள் உங்களுக்கு விசா வழங்குவதற்கு முன்பாகவே உங்களிடம் ரிட்டர்ன் டிக்கெட் இருக்க வேண்டும் என நிர்பந்திக்கலாம்.

உங்களுக்கான விசா விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் நீங்கள் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம். கொரோனா பரிசோதனைகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகள் மற்றும் உங்களுடைய பயண நேரத்திற்கு எத்தனை மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை எடுக்கப்பட வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

துபாய் வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டாய 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கிடையாது எனினும் விமான நிலையத்தில் எடுக்கப்படும் கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என வருபவர்கள் கட்டாயம் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளை மீறுவோருக்கு 50,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!