UAE Tamil Web

“கனத்த இதயத்துடன் இதனைத் தெரிவிக்கிறோம்” – குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய தூதரகம் வெளியிட்ட ட்வீட்..!

embassy of India

வருகின்ற 72வது இந்திய குடியரசு தின விழா அமீரகத்தில் எளிமையாக நடைபெற இருக்கிறது. அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துபாயில் உள்ள துணைத் தூதரகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

ஒவ்வொரு வருடமும் தூதரும் துணைத் தூதரும் தத்தமது அலுவலகங்களில் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவர். பின்னர் பொதுமக்களுக்கான இந்திய ஜனாதிபதியின் அறிக்கையை வாசிப்பர்.

இதுகுறித்து தூதரகம் ட்விட்டரில்,” கொரோனா காரணமாக இந்த வருட குடியரசு தின கொண்டாட்டங்களை நடத்த வாய்ப்பில்லாமல் இருக்கிறது என்பதனை கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அமீரக வாழ் இந்தியர்கள் அனைவரும் காணொளிக் காட்சி வாயிலாக எங்களோடு இணைந்திருப்பீர் என நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

எல்லா வருடமும் போல இந்த வருடமும் இந்தியன் ஹை ஸ்கூலில் நடைபெறும் குடியரசு தின விழாவில் துணைத் தூதர் டாக்டர். அமன் பூரி தேசியக் கொடியை ஏற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மாணவர்களின் குடியரசு தினவிழா அணிவகுப்பு நடைபெற இருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய பள்ளியின் தலைமை நிர்வாக அதிகாரியான புனித் MK வாசு,” பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக இந்த வருட குடியரசு தின விழாவில் மாணவர்கள் உட்பட 150 பேர் மட்டுமே கலந்துகொள்ள இருக்கிறார்கள். துணைத் தூதர் டாக்டர்.அமன் பூரி தேசியக் கொடியை ஏற்றி விழாவைத் துவக்கி வைப்பதோடு, மூன்று வளாகங்களிலும் நடைபெற இருக்கும் மாணவர்களின் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளைக் காண இருக்கிறார். பிற மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் காணொளிக் காட்சி வாயிலாக நிகழ்ச்சிகளைக் காணுமாறு வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.

பள்ளியின் வைரவிழா ஆண்டு இந்த வருடம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு 60@50@2020 என்பதனை பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள 60 பள்ளியின் வைரவிழா ஆண்டையும் 50 அமீரகத்தின் பொன்விழா ஆண்டையும் 2020 துபாய் எக்ஸ்போ 2020 ஐயும் குறிக்கிறது.