UAE Tamil Web

“கஷ்டப்படும் மக்களுக்கு உதவுவதே உண்மையான ஆன்மீகம்” – அபுதாபி இந்துக்கோவில் அளித்த ஆக்சிஜன் டேங்கர்கள் இந்தியா சென்றடைந்தன..!

oxygen

இந்தியாவின் பல நகரங்கள் கொரோனா இரண்டாம் அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகிறது. பல மருத்துவமனைகள் ஆக்சிஜன் இல்லாமல் தவித்துவருகின்றன. இந்நிலையில் BAPS இந்துக்கோவில் நிர்வாகம் இந்தியாவிற்கு ஆக்சிஜனை வழங்க முன்வந்தது.

இதுகுறித்துப் பேசிய கோவில் நிர்வாகத்தின் ஆன்மீக தலைவர் பிரம்மவிஹாரிதாஸ்,”முதற்கட்ட நிவாரணப் பொருட்களில் மாதந்தோறும் 440 மெட்ரிக் டன் மெடிக்கல் ஆக்சிஜனை இந்தியாவிற்கு அனுப்பும் பணி இந்த வாரத்தில் இருந்து துவங்குகிறது. BAPS நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கொரோனா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு இது உதவியாய் இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

“இந்த வாரம் அனுப்பப்படும் முதல் சுற்று நிவாரணத்தில் 44 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன், 600 சிலிண்டர்களில் 30,000 லிட்டர் மருத்துவ ஆக்ஸிஜன் வாயு மற்றும் 130 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அடங்கும். இந்த மனிதாபிமான நடவடிக்கைகளில் விமான மற்றும் கடல்வழிப் போக்குவரத்திற்கு டிரான்ஸ்வேர்ல்ட் குழுமம் எங்களுக்கு உதவ முன்வந்திருக்கிறது” என அவர் தெரிவித்திருந்தார். தற்போது இந்த முதல்சுற்று நிவாரணப் பொருட்கள் இந்தியாவினை இன்று அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் 25 தன்னார்வலர்களும் இந்தியாவில் 1000 ற்கும் அதிகமான தன்னார்வலர்களும் இந்த செயலுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் துபாயைச் சேர்ந்த குளோபல் கேசஸ் நிறுவனத்தின் உதவியினால் 1,600 ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆகியவை இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. அமீரக வாழ் இந்தியர்கள் பலரின் உதவியும் இதில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி BAPS நிர்வாகத்தின் தலைவர் அசோக் கோடேச்சா இதுகுறித்துப் பேசுகையில்,” இந்தியாவில் எங்களது நிறுவன மருத்துவமனைகள் மற்றும் கள மருத்துவமனைகள் மூலமாக சுமார் 4000 மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சரக்குகளை எடுத்துச்செல்ல கடினமான கிராமப்புறப் பகுதிகளுக்கும் ஆக்சிஜன் உதவி வழங்கப்பட்டுவருகிறது” என்றார்.

இதுகுறித்துப் பேசிய பிரம்மவிஹாரிதாஸ்,” உண்மையான ஆன்மீகம் என்பது தன்னலமற்று, தூய்மையான உள்ளத்துடன், ஒருமைப்பாடு மற்றும் மனித நேயத்துடனும் சமூகத்திற்கு உதவுவதில் தான் இருக்கிறது. ஒருவருடைய வாழ்க்கையைக் காப்பாற்றுவது என்பது விலைமதிப்பற்றது என எங்களுடைய குரு மகாந்த் சுவாமி மஹாராஜ் எங்களிடம் எப்போதும் சொல்வார். இதுவே எங்களை தொடர்ந்து சோர்வில்லாமல் இயங்க வைக்கிறது” என்றார்.

ஆக்சிஜனை கொள்முதல் செய்வது மற்றும் ஏற்றுமதி செய்வது என இதுவரையில் 5 மில்லியன் திர்ஹம்ஸ் செலவாகியிருக்கிறது. நன்கொடையாளர்கள் மற்றும் எங்களுக்கு உதவி செய்பவர்கள் மூலமாக இந்தத் தொகை அளிக்கப்பட்டிருக்கிறது என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

oxygen
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap