அமீரகத்தில் சமீப வாரங்களில் தினசரி கொரோனாத் தொற்று அதிகரித்துவருகிறது. இந்நிலையில் திருமண நிகழ்ச்சிகள், இரங்கல் கூட்டம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் 60 சதவீத மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என அபுதாபி அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு டிசம்பர் 26 ஆம் தேதிமுதல் நடைமுறைக்குவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள் அரங்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை 50க்கு அதிகமாக இருத்தல் கூடாது; பொது வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 150 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். வீட்டில் நடைபெறும் குடும்ப நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 30 பேர் மட்டுமே கலந்துகொள வேண்டும்.
அதேபோல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் தங்களது Alhosn அப்ளிகேஷனில் கிரீன் ஸ்டேட்டஸைக் காட்ட வேண்டும்; 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட நெகட்டிவ் PCR முடிவினை வைத்திருத்தல் வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்றுதல் வேண்டும்.
கொரோனா விதிமீறலைக் கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ரோந்துப் பணியில் ஈடுபடும் எனவும் ஆணையம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் கூட்டமான இடத்திற்குச் செல்வதைத் தவிக்க வேண்டும் எனவும் 2 மீட்டர் சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் வேண்டும் எனவும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
அதேபோல, தகுதியுடைய அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசியினை கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Abu Dhabi Emergency, Crisis and Disasters Committee has updated measures to host indoor and outdoor social events and family celebrations, effective 27 December 2021, enhancing precautionary measures to protect public health. pic.twitter.com/v0tsflyd6S
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) December 26, 2021