UAE Tamil Web

கொரோனா விதிமுறையை காற்றில் பறக்கவிட்ட கஃபே : 60000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்த காவல்துறை..!

ajman

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறுபவர்களுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகம் தனது நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு, பொருளாதார மேம்பாட்டு துறையோடு இணைந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறியதாக கடந்த செவ்வாயன்று ஒரு கஃபேயை மூட உத்தரவிட்டனர்.

அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகள் விதித்திருந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருந்ததற்காக அபராதமும் விதித்துள்ளனர்.

அஜ்மான் காவல்துறையின் தளபதியும், அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஷேக் சுல்தான் பின் அப்துல்லா அல் நுவைமி கூறுகையில், “வர்த்தக மற்றும் பொருளாதார நிறுவனங்கள் இரவு 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கஃபேயானது நள்ளிரவு 2 மணி வரை இயங்கியுள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையுமே சரிவர பின்பற்றவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. இந்த விதி மீறல் காரணமாக கஃபே ஒரு மாத காலத்திற்கு மூட உத்தரவிடப்பட்டது” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த கஃபே மூடப்பட்ட பின்னரும் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரை அகற்றிவிட்டு வழக்கம்போல் கஃபே இயங்கி உள்ளது.

கஃபேயில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர்களை அகற்றியதற்காக 10,000 திர்ஹம்ஸ் அபராதமும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறியதற்காக 50,000 திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

அஜ்மானில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்பதன் அவசியம் மற்றும் எல்லா நேரங்களிலும் பொது சுகாதார நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் முக்கியத்துவம் குறித்தும் அல் நுவைமி நினைவூட்டினார்.

அதே சமயம் இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்கத் தவறும் எவரையும் அதிகாரிகள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் அழுத்தமாக கூறினார்.

ajman
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap