UAE Tamil Web

IATA டிஜிட்டல் பாஸ்போர்டை அறிமுகம் செய்தது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்..!

Digital Passport

சர்வதேச விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (IATA) டிராவல் பாஸ் என்று கருதப்படும் மொபைல் அப்ளிகேஷனை நேற்று அறிமுகம் செய்தது துபாயை தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் விமான நிறுவனம். பயணிகள் தங்களது போக்குவரத்து ஆவணங்கள் மற்றும் கொரோனா பரிசோதனை அறிக்கைகளை இதன்மூலமாக எளிதில் சமர்ப்பிக்க முடியும்.

IATA டிராவல் பாஸ் அப்ளிகேஷன் ஓர் ஒருங்கிணைந்த பயணப் பதிவேடு ஆகும். இதன்மூலமாக பயணிகள் தங்களது பிரயாணம் குறித்த அனைத்து தகவல்களையும் பெற முடியும். அதாவது ஒரு நாட்டிற்குள் நுழைவதற்கான பயண அனுமதி உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் அப்ளிகேஷன் மூலமாகவே அறிந்துகொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல், பயணிகள் தங்களுக்கு அருகில் உள்ள பரிசோதனை நிலையங்களின் அமைவிடம் குறித்துத் தெரிந்துகொள்ள முடியும். அதேபோல, தாங்கள் செல்லும் நாட்டில் கொரோனா தடுப்பூசி குறித்து பின்பற்றப்படும் விதிமுறைகள் குறித்தும் அறிந்துகொள்ளலாம்.

நேற்று துபாய் – பார்சிலோனா இடையே இயக்கப்பட்ட EK185 விமானத்தில் பயணித்தவர்கள் தங்களது பயணத்திற்கு முன்பான கொரோனா பரிசோதனை முடிவுகளை இந்த அப்ளிகேஷன் வாயிலாக எமிரேட்ஸ் நிறுவனத்திடம் சமர்பித்திருக்கிறார்கள்.

மக்கள் கொரோனா குறித்த ஆவணங்களை, எளிதிலும் பாதுகாப்பாகவும் எடுத்துச்செல்ல இந்த அப்ளிகேஷன் மிகவும் வசதியாக இருக்கும். எதிர்காலத்தில் மக்கள் தங்களது கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களையும் இதன் மூலமாகவே ஆணையம் மற்றும் விமான நிறுவனங்களிடம் சமர்ப்பிக்க முடியும்.

இதுகுறித்துப் பேசிய எமிரேட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி அதெல் அல் ரெதா,” பயணிகளின் கொரோனா குறித்த தகவல்களை கையாள்வதில் இது முன்னோடியாகும். இந்தத் திட்டத்தின் மூலமாக IATA உடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வாடிக்கையாளர்களின் திருப்தியை மேம்படுத்த நாங்கள் பல்வேறு ஆக்கப்பூர்வ திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்” என்றார்.

துபாயிலிருந்து பார்சிலோனாவிற்கும் லண்டன் ஹீத்ரோவிலிருந்து துபாய்க்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட எமிரேட்ஸ் விமானங்களில் இந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. விரைவில் பிற பயண இலக்குகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில முதன்மை ஆரம்ப சுகாதார மையங்களுடன் எமிரேட்ஸ் நிறுவனம் கூட்டணி வைத்துள்ளது. இதன்மூலமாக, இம்மையங்கள் அப்ளிகேஷன் வாயிலாகவே பரிசோதனை முடிவுகளை வெளியிடும். ஐக்கிய ராஜ்யத்தில் இருந்து வருவோர் Screen4 லேப்கள் மூலமாக பரிசோதனை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digital Passport
0 Shares
Share via
Copy link