UAE Tamil Web

புதிய கொரோனா வைரஸ் பரவல்: சவூதி, குவைத் செல்லமுடியாமல் அமீரகத்தில் தவித்த 300 இந்தியர்களுக்கு தங்குமிடம், உணவு அளித்த நிறுவனம்..!

indian expats

ஐரோப்பாவில் புதியவகை கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதன் காரணமாக சவூதி மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தங்களது எல்லைகளை மூடின. இதனால் அமீரகம் வழியாக மேற்கண்ட நாடுகளுக்குப் பயணிக்க காத்திருந்த 300 இந்தியர்கள் அமீரகத்தில் சிக்கிக்கொண்டனர்.

- Advertisment -

அமீரகம் வழியாக இந்தியாவிலிருந்து சவூதி மற்றும் குவைத் செல்லவிருந்த இவர்கள் அமீரகத்தில் ஹோட்டல்கள் மற்றும் பிற தங்குமிடங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டனர். தற்போது தனிமைப்படுத்தல் காலத்தினை முடித்திருக்கும் இவர்களால் சவூதி மற்றும் குவைத்திற்குச் செல்ல முடியாமல் போகவே கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

உதவிக்கரம்

துபாய் மார்கஸ் மையத்தின் (Dubai Markaz Centre) தன்னார்வலர்கள் மற்றும் இந்திய கலாச்சார அமைப்பு (ICF) ஆகியோர் கட்டுமான நிறுவனமான ஆசா குழுமத்துடன் இணைந்து தவிக்கும் இந்தியர்களை மீட்க முன்வந்தனர்.

தனிமைப்படுத்தல் காலத்தினை முடித்து சவூதி மற்றும் குவைத்திற்குச் செல்ல முடியாமல் தவித்த இந்தியர்களுக்கு இலவச உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவை வழங்கப்படுவதாக அந்நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான டாக்டர். அப்துல் சலாம் சகாஃபி (Abdul Salam Saquafi) தெரிவித்தார்.

இதுகுறித்துப் பேசிய அவர்,” துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க் பகுதியில் 300 பேர் தங்கும் அளவுள்ள குடியிருப்பு வளாகத்தினை வாடகைக்கு எடுத்துள்ளோம். இந்தியர்கள் தங்களது ஹோட்டலில் இருந்து எங்களுடைய இடத்திற்கு வர பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலவச உணவு மற்றும் லாண்டரி வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவர்கள் எங்களுடைய விருந்தாளிகள். அவர்களுக்கு ஒரு கஷ்டம் வருகையில் நாங்கள் அதனை தீர்க்கவே முயல்வோம். இத்தகைய நடவடிக்கைகளுக்கு தேவையான அனுமதிகளை உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து பெற்றிருக்கிறோம்” என்றார்.

“நல்ல உள்ளம் கொண்ட தொழிலதிபர்கள் உதவியால் இந்த சேவைகள் செய்யமுடிகிறது. எங்களுடைய புரவலரான இந்தியாவின் கிராண்ட் முஃப்தி ஷேக் அபூபக்கர் அகமது மற்றும் ஆசா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் குழுவின் தலைவரான முகமது சாலித் ஆகியோரின் ஈகை குணத்தாலும் இது சாத்தியமாகியிருக்கிறது” என சகாஃபி தெரிவித்தார்.

வாழ்க்கை அளித்த வாட்சாப்

“கஷ்டத்தில் தவித்துவந்த இந்தியர்களை காக்க வாட்சாப் குழு ஒன்று உருவாக்கப்பட்டு பல்வேறு நபர்களின் தகவல்கள் மற்றும் போன் நம்பர்கள் அதில் இணைக்கப்பட்டன. அதன்மூலமே இந்தியர்களைத் திரட்ட முடிந்தது” என சகாஃபி தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து கிளம்பியது, தனிமைப்படுத்துதல், விமான கட்டணம், உணவு முதலியவற்றுக்கு இதுவரையில் சுமார் 70,000 ரூபாய்கள் செலவழித்ததாக மீட்கப்பட்ட இந்தியர்கள் தெரிவித்தனர். தங்களை மீட்டு, இலவச தங்குமிடம் மற்றும் உணவளிக்கும் நல்லுள்ளம் கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அந்த இந்தியர்கள் தெரிவித்தனர்.

இதுபோல் அமீரகத்தில் கஷ்டப்படும் இந்தியர்கள் drsalamern@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம் என சகாஃபி தெரிவித்துள்ளார்.