UAE Tamil Web

“இந்தியாவில் அப்பா, அம்மா தனியா இருக்காங்க” – அச்சத்தில் தவிக்கும் அமீரக வாழ் இந்தியர்கள்..!

NAT-Ravi-and-Aarti-Bharadwaj

கொரோனாவின் இரண்டாம் அலையால் தவிக்கும் இந்தியாவை உலகமே பதற்றத்தோடு பார்த்துவருகிறது. லட்சக்கணக்கில் பாதிப்புகள், ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் என பேரழிவை நோக்கி இந்தியா சென்றுகொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனாவின் வேகம் அதிர்ச்சியளிப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் தங்களது பெற்றோர்களை விட்டுவிட்டு அமீரகம் வந்திருக்கும் இந்தியர்களின் நிலை கவலைக்குரியதாக மாறிவருகிறது.

இந்தியாவில் இருந்து வரும் ஒவ்வொரு தகவலும் இங்கிருப்போரை பதைபதைக்கச் செய்கிறது. அப்படியானவர்களில் ஒருவர் தான் ரவி பரத்வாஜ் மற்றும் அவரது மானைவி ஆர்த்தி. 58 வயதான ரவியின் பெற்றோர்கள் ஹரியானாவில் உள்ள குர்கோன்-னில் வசித்து வருகின்றனர்.

“நாங்கள் கடைசியாக 2019 ஆம் ஆண்டு நண்பரின் மகன் திருமணத்திற்காக ஊருக்குச் சென்றிருந்தோம். அப்போதுதான் அப்பா, அம்மாவை சந்தித்துவிட்டு வந்தோம். இப்பொது இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர்கள் வீட்டில் தனியாக இருக்கிறார்கள். அப்பாவிற்கு (பரத்வாஜ்) 82 வயதும், அம்மாவிற்கு (புஷ்பா) 73 வயதும் ஆகின்றன. கொரோனாவின் வேகம் அதிகரித்துவரும் நிலையில் அவர்கள் அங்கே எப்படி இருக்கிறார்கள் என்பதை எண்ணியே எனது நாட்கள கழிகின்றன” என ரவி கவலையோடு தெரிவித்தார்.

ரவி ஒரு சோறு மட்டுமே. அவரைப்போல் இன்னும் பல ரவிகள் அமீரகத்தில் தவித்துவருகின்றனர். தத்தளிக்கும் இந்தியாவில் தனியாக வசித்துவரும் தங்களது அப்பா, அம்மாவை எண்ணி கண்ணீர் உகுக்கும் பலரையும் பார்க்க முடிகிறது.

முடிந்தவரை தினந்தோறும் உங்களது பெற்றோரிடம் போனில் பேசுங்கள். நம்பிக்கையுடன் இருக்கச் சொல்லுங்கள். நான் இருக்கிறேன் எனச் சொல்லுங்கள். இருளையும், கொடும் நோய்களையும், வாடையையும், கோடையையும் தாண்டித்தான் உலகம் உருப்பெற்றது எனச் சொல்லுங்கள். இதற்கு முன்னர் பெருநோய்களால் உலகம் ஸ்தம்பித்த போதும் அதிலிருந்து மீண்டு வந்தது உலகம் என்ற வரலாற்று வரிகளை எடுத்துச் சொல்லுங்கள்.

எல்லாத் துயரமும் விரைவில் சரியாகும் எனச் சொல்லுங்கள். தொற்றுத் தீர்ந்த ஒரு காலம் விரைவில் வரும். உலகம் தனது அச்சில் மீண்டும் ஆனந்தமாய் சுற்றும். அப்போது உங்களுருகில் நான் இருப்பேன் எனச் சொல்லுங்கள்.  அவர்களுக்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் ஆறுதலான சொற்களும், நம்பிக்கை தரக்கூடிய வார்த்தைகளுமே.