UAE Tamil Web

இந்தியர்கள் அமீரகம் வழியாக சவூதி, குவைத்திற்குச் செல்லவேண்டாம் – இந்திய தூதரகம் அறிவுரை..!

Airport (2)

இந்தியாவிலிருந்து அமீரகம் வழியாக சவூதி அரேபியா மற்றும் குவைத்திற்குச் செல்லும் பயணிகளுக்கான எச்சரிக்கையை நேற்று அபுதாபியில்  உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் துபாயில் உள்ள துணைத் தூதரகம் ஆகியவை வெளியிட்டுள்ளன.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவிலிருந்து அமீரகம் வழியாக சவூதி அரேபியா மற்றும் குவைத்திற்குச் செல்ல தற்போது வாய்ப்பில்லை என தூதரகம் தெரிவித்துள்ளது.

தற்போது அமீரகத்தில் தவிக்கும் இந்தியர்கள், மீண்டும் தாயகம் திரும்புமாறும், தாங்கள் செல்லவிருக்கும் நாடு விதித்துள்ள கொரோனா தொடர்பான தடைகளை நீக்கிய பிறகு மீண்டும் தங்களது பயணத்தைத் தொடருமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம்முதல் அமீரகம் வழியாக சவூதி செல்ல முயற்சித்த சுமார் 600 இந்தியர்கள் அமீரகத்தில் சிக்கிக்கொண்டதாக துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கேரளா முஸ்லீம் கலாச்சார மையம் (KMCC) இவ்வாறு சிக்கிக்கொண்டவர்களுக்கு உதவி செய்ததாகவும், தற்போது அதற்கும் வாய்ப்பில்லை என்பதால் இந்தியர்கள் தாங்கள் செல்லும் நாடு விதித்திருக்கும் விதிமுறைகளை அறிந்த பிறகு இந்தியாவிலிருந்து தங்களது பயணத்தினைத் துவங்குமாறு துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அதேபோல, அவசர நிலைகளில் தங்களைத் தற்காத்துக்கொள்ளத் தேவையான பணம் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை பயணத்தின்போது எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Airport (2)
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap