UAE Tamil Web

முக்கியச் செய்தி: இந்தியா – துபாய் இடையேயான விமானப் போக்குவரத்து : எமிரேட்ஸ், ஃப்ளைதுபாய், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் வெளியிட்ட புதிய அறிவிப்பு..!

Dubai-International-Airport--Terminal-3--Dubai-Airport

இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவல் அதிகமாகிவருவதையொட்டி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இந்தியாவில் இருந்து துபாய் வருவோருக்கான PCR பரிசோதனைக்கான செல்லுபடியாகும் கால அளவை சமீபத்தில் குறைத்தது.

இந்தியாவில் இருந்து துபாய் வருவோர் அனைவரும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருத்தல் வேண்டும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்திருந்தது. வரும் ஏப்ரல் 22 ஆம் தேதிமுதல் இந்த நடைமுறை அமலுக்குவரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமீரக விமான நிறுவனங்களான எமிரேட்ஸ், ஃப்ளை துபாய் மற்றும் இந்திய விமான நிறுவனங்களான ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா, இண்டிகோ ஆகியவையும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து எமிரேட்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களில் இருந்து, பயண நேரத்திற்கு முன்னதாக 48 மணிநேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பயணிகள் வைத்திருக்கவேண்டும். கொரோனா நெகட்டிவ் சான்றிதழில் அசல் அறிக்கையுடன் (original report) இணைக்கப்பட்ட ஒரு QR குறியீடும் இருக்க வேண்டும் அப்படியில்லையெனில் அந்த சான்றிதழ் ஏற்கப்படாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியிருக்க ஃப்ளைதுபாய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஏப்ரல் 22 ஆம் தேதிமுதல், இந்தியாவில் இருந்து துபாய் வருவோர் அனைவரும் தங்களது பயண நேரத்திற்கு முன்னதான 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையின் அறிக்கையை பிரிண்ட் எடுத்து வரவேண்டும். சான்றிதழில் QR குறியீடும் இருக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் பெறப்பட்ட பரிசோதனை முடிவுகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் முறையாக கையொப்பமிடப்பட்டு முத்திரையிடப்பட்டிருக்கவேண்டும் எனவும் அவை ஆங்கிலம் அல்லது அரபியில் மட்டுமே இருக்க வேண்டும். கையால் எழுதப்பட்ட சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்படாது” என இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகமாகி வருவதாலும், சில பரிசோதனை நிலையங்கள் முடிவுகளை வெளியிட 3 அல்லது 4 நாட்கள் எடுத்துக்கொள்வதால் பல பயணிகள் தங்களால் துபாய் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துவருகின்றனர்.

இருப்பினும் பயணத்திற்கு முன்னதாக எடுக்கவேண்டிய கொரோனா பரிசோதனையின் செல்லுபடிக்காலம் ஷார்ஜாவிற்கு 72 மணிநேரமாகவும், அபுதாபிக்கு 96 மணிநேரமாகவும் (முன்பு இருந்ததைப்போலவே) தொடர்வதாக சில டிராவல் ஏஜெண்ட்கள் தெரிவித்துள்ளனர்.

Dubai-International-Airport--Terminal-3--Dubai-Airport
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap