தொழிலார்களின் காலாவதியான ரெஸிடென்ஸி விசாவை தானாகவே புதுப்பிக்கும் திட்டம் அறிமுகம்..! மருத்துவ பரிசோதனை தேவை இல்லை.!

visa
Image Credits- Gulf News

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MOHRE), சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MOHAP), அடையாள மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம் (FAIC) இவை மூன்றும் இணைந்து புதன் கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில், நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் ஆகியோருக்கு பணி அனுமதி (Work Permit) மற்றும் ரெசிடென்ஸி விசாக்கள் காலாவதியாகியிருந்தால் தானாகவே புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாவை புதுப்பிக்கும் போது மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளிலிருந்து (medical test) விலக்கு அளிப்பதாகவும் அறிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமீரகம் முழுவதும் மருத்துவ பரிசோதனை மையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதால் பணியாளர்கள் மருத்துவ பரிசோதனை மையங்களை அணுக தேவையில்லை.

அதற்கு பதிலாக அங்கீகரிக்கப்பட்ட கட்டண சேனல்கள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும். அவ்வாறு கட்டணம் செலுத்தப்பட்டவுடன் பணியாளர்களின் விசாக்கள் தானாகவே புதுப்பிக்கப்படும். இதனால் அவர்கள் அமீரகத்தில் தொடர்ந்து சட்டபூர்வமாக தங்கி வேலை செய்ய முடியும்.

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பணியாளர்களை குறித்த தகவல்களை முதலாளிகள் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தை அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் எடுத்துரைத்தது.

அனைத்து தொழிலாளர்களும் அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உடல்நலம் குறித்த முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

Loading...