UAE Tamil Web

முக்கியச் செய்தி: இந்தியாவில் இருந்து துபாய் வருவோருக்கான PCR பரிசோதனை செல்லுபடியாகும் காலக்கெடு குறைப்பு..!

Airport (2)

இந்தியாவில் இருந்து துபாய் வருவோர் அனைவரும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருத்தல் வேண்டும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இன்று அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 22 ஆம் தேதிமுதல் இந்த நடைமுறை அமலுக்குவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, இந்த நேர கணக்கீடானது மாதிரிகள் சேகரிக்கப்படும் நேரத்திலிருந்து கணக்கிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோதனைக்கான மாதிரிகள் சேகரிப்பு நடைபெற்ற தேதி மற்றும் நேரம், சோதனை முடிவு பெறப்படும் தேதி மற்றும் நேரம் ஆகியவை துல்லியமாக இருப்பதை பயணிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் ஆங்கிலம் அல்லது அரபி மொழியில் இருக்க வேண்டும் எனவும் பயணிகள் பயணிக்கும் இடத்திலுள்ள சான்றளிக்கப்பட்ட ஆய்வகத்திலிருந்து PCR சோதனை முடிவுக்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிறுவனம் மற்றும் துபாயில் உள்ள அதிகாரிகள் சரிபார்க்கும் வகையில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழில் அசல் அறிக்கையுடன் (original report) இணைக்கப்பட்ட ஒரு QR குறியீடும் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தியாவில் இருந்து துபாய் பயணிப்போர் தங்களது பயண நேரத்திற்கு முன்பாக 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா சான்றிதழை வைத்திருந்தால் போதும். தற்போதுவரையில் இதுவே நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் PCR பரிசோதனைக்கான செல்லுபடியாகும் காலக்கெடுவை குறைத்துள்ளது.