UAE Tamil Web

துபாய் எக்ஸ்போ 2020: மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஆதாரங்களை காட்டவேண்டிய கட்டாயமில்லை..!

VACCINE

துபாயில் ஆறு மாதம் நடைபெற இருக்கும் உலகின் மிகப்பெரிய கண்காட்சியான துபாய் எக்ஸ்போ வரும் அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கி அடுத்தவருடம் மார்ச் 31 உடன் முடிவடைகிறது. இதற்கான கவுண்டவுனை கடந்தவாரம் துபாயின் ஆட்சியாளர் பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் துவங்கிவைத்தார்.

இந்நிலையில் இங்கு அமைக்கப்பட்டுள்ள துபாய்க்கான பகுதிக்குள் நுழைய மக்கள் தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என துபாய் எக்ஸ்போ-வின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தற்போதைய நிலவரப்படி எக்ஸ்போ தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஆதாரங்களை சமர்ப்பிக்கவேண்டிய அவசியமில்லை. இருப்பினும் அனைவரையும் நாங்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். முக்ககவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மக்கள் பின்பற்றவேண்டும்” என துபாய் எக்ஸ்போ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமீரகத்திற்குள் நுழைய அரசு விதித்திருக்கும் புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள துபாய் எக்ஸ்போ தளத்தினைப் பார்வையிடுமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமீரகத்தில் இதுவரையில் 71 சதவீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசியானது செலுத்தப்பட்டிருக்கிறது. தடுப்பூசி எடுத்துக்கொள்ள தகுதியானவர்களில் 91.8 சதவீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VACCINE
0 Shares
Share via
Copy link