UAE Tamil Web

12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இனி ட்ரைவ் த்ரூ மையங்களிலும் பைசர் தடுப்பூசி போடப்படும் – அரசு அறிவிப்பு..!

Pfizer

கடந்த வாரத்தில் 12 – 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு பைசர் கொரோனா தடுப்பூசி அளிக்க அமீரக அரசு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் அமீரகம் முழுவதிலும் உள்ள சேஹாவிற்குச் சொந்தமான இடங்களில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் கொரோனா தடுப்போசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி நிலையங்கள் மற்றும் டிரைவ் த்ரூ மையங்களிலும் இவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேஹா வெளியிட்டுள்ள அறிக்கையில்,”அபுதாபி, துபாய் மற்றும் வடக்கு எமிரேட்களில் உள்ள 60 நிலையங்களில் பைசர் மற்றும் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவருகின்றன. இருப்பினும் பைசர் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. சினோபார்ம் 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியைப் பெற சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, அவர்கள் யார் யார் எனக் கீழே காண்போம்.

  • தற்போது அல்லது சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்.
  • கொரோனா தடுப்பூசி சோதனையின் தன்னார்வலர்கள்
  • கர்ப்பிணிகள்
  • வெளிநாடுகளில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள்
  • தடுப்பூசி மற்றும் தடுப்பூசியில் பயன்படுத்தப்படும் மருந்துப் பொருட்களினால் கடுமையான அலர்ஜி உண்டாகக்கூடியவர்கள்.
  • தடுப்பூசி போடுவதினால் மோசமாகக்கூடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

பள்ளிகள் திறக்கப்படும் போது தகுதியுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசியானது வழங்கப்படும் என சமீபத்தில் அரசு உயரதிகாரி தெரிவித்திருந்தார். அதேபோல ஜெம்ஸ் கல்விக் குழுமம் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க முயற்சி எடுத்துவருவதாக அறிவித்துள்ளது.

Pfizer
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap