35.9 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

அபுதாபிக்குள் நுழைய விரும்பும் குடும்பங்கள் ரேபிட் பரிசோதனைக்காக முன்பதிவு செய்ய வேண்டாம்..!

COVID-19-test-for-entering-Abu-Dhabi_

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அபுதாபிக்குள் நுழைய கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகவே, அபுதாபிக்குள் நுழைய விரும்புபவர்களுக்கு உதவி செய்யும் வகையில் துபாய் – அபுதாபி எல்லைப் பகுதியில் இருக்கும் கன்தூத் (Ghantoot) சோதனை சாவடிக்கு முன்பு நவீன லேசர் அடிப்படையிலான ரேபிட் பரிசோதனை நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. இங்கே ஒரு நபருக்கு லேசர் அடிப்படடையிலான ரேபிட் பரிசோதனை செய்ய 50 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் 5 நிமிடங்களில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரேபிட் பரிசோதனையை எடுத்துக்கொள்ள முன் அனுமதி தேவையில்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. (இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

இந்நிலையில் இந்த ரேபிட் டெஸ்ட் நிலையங்களில் அதிகளவில் மக்கள் கூடவே அதிகாரிகளால் கூட்டத்தை சமாளிக்க இயலாமல் போயிருக்கிறது. இதனால் இந்த லேசர் அடிப்படையிலான ரேபிட் டெஸ்ட் செய்துகொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் முன்பதிவு செய்திருத்தல் அவசியம் என பின்னர் அறிவிக்கப்பட்டது.

முன்பதிவு அவசியமில்லை

“நாங்கள் 24 மணிநேரமும் சேவைகளை வழங்கிவருகிறோம். குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். ஆகவே தனி நபர்களைப் போல அபுதாபிக்குள் நுழைய விரும்பும் குடும்பங்கள் இனி அதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை” என ரேபிட் பரிசோதனை நிலையத்தின் மேற்பார்வையாளர் அகமது அல் ரியாமி (Ahmed Al Reyami) தெரிவித்திருக்கிறார்.

“தினந்தோறும் 6,500 மக்கள் இந்த ரேபிட் பரிசோதனை நிலையத்திற்கு வருகிறார்கள். வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை 8,000 ஆக இருக்கிறது. இருப்பினும், ஈத் பண்டிகையையொட்டி ஒரு நாளைக்கு 10,000 பேர் பரிசோதனைக்காக வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்” என ரியாமி தெரிவித்திருக்கிறார்.

ஏன் இந்த முடிவு?

ரேபிட் பரிசோதனை எடுத்துக்கொள்ள முன்பதிவு அவசியம் என அறிவிப்பு வந்ததுமே, குடியிருப்பாளர்கள் அதிகளவில் முன்பதிவு செய்யத் துவங்கிவிட்டார்கள். இதனால் இரண்டு வாரத்திற்கான முன்பதிவு ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டதாக குடியிருப்பாளர்கள் இணையம் மூலமாக தெரிவிக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தனி நபர்களுக்கு மேலும் 3 மையங்கள்

தனி நபர்களின் முன்பதிவு குறித்த சிரமங்களைத் தீர்க்கும் விதமாக மேலும் 3 ரேபிட் பரிசோதனை மையங்கள் அபுதாபியில் துவங்கப்படும் என ரியாமி தெரிவித்திருக்கிறார். அபுதாபியில் உள்ள சையத் ஸ்போர்ட்ஸ் சிட்டி, கார்னிச் பகுதி மற்றும் அல் அய்ன் பகுதியில் உள்ள ஹிலி பகுதியில் இந்த கூடுதல் ரேபிட் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையங்களுக்கு பரிசோதனைக்கு செல்வோர், SEHA ஸ்மார்ட் அப்ளிகேஷனை தரவிறக்கி பரிசோதனைக்கான முன்பதிவு கோரி விண்ணப்பிக்க வேண்டும் எனவும் இந்த பரிசோதனை மையங்கள் ஆகஸ்டு 1 ஆம் தேதியிலிருந்து செயல்படத்துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைவான கட்டணம், உடனடியாக கிடைக்கும் பரிசோதனை முடிவுகள் என பல நன்மைகள் இருப்பதால் அபுதாபிக்கு பயணிக்கும் மக்கள் PCR கொரோனா பரிசோதனையைக் காட்டிலும், இந்த ரேபிட் பரிசோதனையை தங்களது முதன்மைத் தேர்வாக வைத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க.!