கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக அமீரகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 2616 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 982 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பிய நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகரிக்கும் கொரோனா தொற்றால் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தொலைநிலை கற்றல் முறை ஜனவரி 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) அறிவித்துள்ளது.
தொற்றுநோயியல் சூழ்நிலையின் முன்னேற்றங்களின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை தொலைதூரக் கல்வியை ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பதாக NCEMA அறிவித்தது.
“கல்வி வசதிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் பாதுகாப்பாக திரும்புவதற்கும், அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பையும் உன்னிப்பாக கவனித்து வருவதாக” அமீரக கல்வித்துறையின் செய்தித் தொடர்பாளர் ஊடகச் சந்திப்பின் போது தெரிவித்தார்.
“ கல்வி நிறுவனங்களும், பணியாளர்களும் கொரோனாவை கையாள்வதில் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளனர். நாட்டின் உத்தரவுகளை செயல்படுத்துவதற்கும், பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நாங்கள் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்” என்றும் அவர் கூறினார்.