UAE Tamil Web

உயிரிழப்பை 85% குறைக்கலாம் – பயன்பாட்டிற்கு வரும் புதிய கொரோனா சிகிச்சை..!

uae vaccine

கொரோனாவின் அடுத்தடுத்த அலைகளால் அகிலமே அவதிக்குள்ளாகியிருக்கும் இந்த நேரத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த கிளாக்ஸோஸ்மித்கிளின் (GlaxoSmithKline) (GSK) மற்றும் விர் பையோடெக்னாலஜி (Vir Biotechnology) குழுமம் ஆகியவை இணைந்து புதிய கொரோனா மருந்து ஒன்றினைத் தயாரித்துள்ளனர். சொட்ரோவிமாப் (Sotrovimab) (Vir-7831) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த மருந்தினை நோயப்பரவலின் ஆரம்ப காலகட்டத்திலேயே பயன்படுத்துவதன் மூலமாக 85% உயிரிழப்பைக் குறைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 40 கிலோவிற்கு அதிகமாக உள்ளவர்கள் இம்மருந்தினைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிங்கிள் டோஸ் மோனோக்லோனல் ஆண்டிபாடி (monoclonal antibody) ஆகும். இந்த மருந்திற்கு உரிமம் அளித்து நோயாளிகளுக்கு இதனைப் பயன்படுத்த அனுமதியளித்த முதல்நாடு எனப் பெயர்பெற்றிருக்கிறது அமீரகம்.

அமீரக சுகாதரத்துறை மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் (Mohap) இந்த மருந்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. Sars-CoV-2 வைரசிற்கு எதிரான ஆய்வுகளின்போது இந்த மருந்து சிறப்பாக செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளதையடுத்து Mohap இதற்கு அனுமதியளித்துள்ளது.

தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இள வயதுடையவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை 24 மணிநேரத்திற்கு மேலாகக் குறைக்கவும் 85% உயிரிழப்பை கட்டுப்படுத்தவும் இந்த மருந்து நிச்சயம் உதவும் எனத் தெரிவிக்கப்படுள்ளது.

இந்த சொட்ரோவிமாப் மோனோ தெரப்பி மூலமாக இந்தியாவில் பரவும் உருமாறிய கொரோனா வைரஸ் உட்பட பல உருமாற்றங்களைக் கொண்ட கொரோனா வைரஸ் தாக்குதலையும் கட்டுப்படுத்த முடியும் என விர் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியான ஜார்ஜ் ஸ்கேங்கோஸ் தெரிவித்திருக்கிறார்.

மேலும் இதுகுறித்துப் பேசிய Mohap அமைச்சர் அப்துல்ரகுமான் பின் முகமது அல் ஓவைஸ்,” கொரோனாவில் இருந்து மக்கள் விரைந்து மீளவும், உயிரிழப்பைக் குறைக்கவும் அவசரநிலை பிரிவில் மருத்துவமனையில் அதிகநேரம் அனுமதிக்கப்படும் நிலையை குறைக்கவும் இந்த மருந்து உதவும். அமீரகத்தின் பரிசோதனை மற்றும் தடுப்பூசித் திட்டத்திற்கு இந்த மருந்து நிச்சயம் உதவிபுரியும்” என்றார்.

இந்த மருந்தினை மருத்துவர்கள் நோய்த்தொற்றின் ஆரம்பகாலத்தில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே அமீரகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.