UAE Tamil Web

அமீரகம் : 12 – 15 வயதுடையவர்களுக்கு பைசர் கொரோனா தடுப்பூசியை வழங்க அரசு ஒப்புதல்..!

VACCINE

அமீரகத்தில் 12 – 15 வயதுக்குட்பட்டோருக்கு அவசர பயன்பாட்டிற்கு பைசர் பையோஎன்டெக் தடுப்பூசியை வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

உள்ளூர் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுமுடிவுகள் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருப்பதையொட்டி தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 12 – 15 வயதுக்குட்பட்டோருக்கு அவசர பயன்பாட்டிற்கு பைசர் பையோஎன்டெக் தடுப்பூசியை வழங்க அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்புத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த வயதினரை கொரோனா தொற்றில் இருந்து காக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சமூக மக்கள் அனைவருக்கும் எளிதான முறையில் தடுப்பூசி கிடைத்திடும் நோக்கில் அபுதாபி சுகாதாரத்துறை, அபுதாபி முதன்மை சுகாதார மையம், துபாய் சுகாதார ஆணையம் ஆகியவை இலவச தடுப்பூசித் திட்டத்தை அறிவித்தது நினைவிருக்கலாம்.

சமீபத்தில் அமெரிக்காவில் 12 – 15 வயதுக்குட்பட்டோருக்கு அவசர பயன்பாட்டிற்கு பைசர் பையோஎன்டெக் தடுப்பூசியை வழங்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசிக்கான வயது வரம்பைக் குறைப்பதன் மூலம் குறைந்த வயதுடையவர்களை கொரோனா தொற்றில் இருந்து காக்க அரசு முடிவெடுத்துள்ளது. முன்னதாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி முதல் 16 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது நினைவில்கொள்ளத்தக்கது.

கடந்தவருடம் இலவச தடுப்பூசித் திட்டத்தை அரசு அறிவித்திருந்ததைத் தொடர்ந்து இதுவரையில் தகுதியுடைய 72 சதவீத மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது. 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் தகுதியுடைய அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி இதுவரையில் 11.4 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.