UAE Tamil Web

அமீரகம்: பொதுத்துறைப் பணியாளர்கள் 14 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயம் PCR சோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் – அரசு அறிவிப்பு..!

Stock-covid-testing-DPI

பெடரல் துறைகள் மற்றும் அமைச்சங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் 2021 ஜனவரி 17 ஆம் தேதி முதல் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் தங்கள் சொந்த செலவில் பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மனித வளங்களுக்கான பெடரல் அமைப்பானது நேற்று அனைத்து பெடரல் அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான புதிய கோவிட் 19 விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில், தொற்று நோயை நிவர்த்தி செய்வதற்கும் விளைவுகளைக் குறைப்பதற்கும் மற்றும் ஊழியர்களின் நலன் காப்பதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து அதிகாரிகளும் தங்களது ஊழியர்கள், அவுட்சோர்சிங் மற்றும் பொது சேவை நிறுவனங்களின் ஊழியர்கள், ஆலோசனை மையங்கள் மற்றும் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் மேலும் இவற்றில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர்கள் ஆகியோருக்கு இந்தப் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது அரசு.

அமைச்சக ஊழியர்கள் மற்றும் பெடரல் துறைகளின் ஊழியர்களுக்கான விதிமுறைகளைப் பொறுத்தவரை, அவர்கள் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் தங்களது சொந்த செலவில் பி.சி.ஆர் பரிசோதனையைப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே கோவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள் மற்றும் உடல் நலம் மற்றும் நோய்கள் காரணமாக கோவிட் 19 தடுப்பூசியை பெற முடியாது என மருத்துவச் சான்றிதழ் பெற்றவர்கள் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் ஒரு பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ளத் தேவையான  நடவடிக்கைகளை பெடரல் நிறுவனம் மேற்கொள்ளும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அவுட்சோர்சிங் நிறுவனங்கள், பொது சேவை நிறுவனங்கள் போன்றவற்றின் ஊழியர்கள், தற்போது அல்லது எதிர்காலத்தில் பெடரல் நிறுவனங்களின் கீழ் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிய இருப்பவர்கள் தங்களது நிறுவனங்களின் செலவில் ஒவ்வொரு இரண்டு வாரத்திற்கு ஒருமுறையும் நாசல் ஸ்வாப் அல்லது PCR பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். தினமும் மேற்கண்ட நிறுவனங்களுக்கு நேரில் வந்து பணிபுரியும் நபர்களுக்கே இந்த விதிமுறை பொருந்தும். கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு இந்த நடைமுறையில் இருந்து விலக்களிக்கப்படும்.

அதுபோல, ஆலோசனை நிறுவனங்கள் மற்றும் நிபுணத்துவ நிறுவனப் பணியாளர்கள், பெடரல் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கும் பணியாளர்கள் தங்களது பணிகாரணமாக கலந்துரையாடவோ, சந்திக்கவோ நேர்ந்தால் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் சுற்றறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியாளர்கள் தங்களது பணிக்கு முன்பு (அதாவது, கலந்துரையாடல் மற்றும் அலுவல் ரீதியிலான கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு முன்பு) 3 நாட்களுக்கு உள்ளாக எடுக்கப்பட்ட PCR பரிசோதனைச் சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு இதில் விலக்குண்டு.

அனைத்து அமைச்சகம் மற்றும் பெடரல் நிறுவனங்களும் தங்களது ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசியைப் பெற ஊக்குவிக்கவேண்டும் என அரசு மனிதவளத் துறைக்கான பெடரல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதனை முன்னிட்டு அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் அனைத்து எமிரேட்களிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசியை வழங்கிவருவதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் அபுதாபி சுகாதாரத்துறைக்குக் கட்டுப்பட்ட சுகாதார நிலையங்களிலும் இந்த இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்பதும் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Stock-covid-testing-DPI
0 Shares
Share via
Copy link