கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அமீரகத்தில் தடுப்பூசி போடும் பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. சுகாதாரத்துறையின் அல்டிமேட் வேலைகளால் அமீரகம் உலக அரங்கில் பல பெருமைகளுடன் முன்னணி வகிக்கிறது. உலகிலேயே முதல் தவணை தடுப்பூசி அதிகம் செலுத்திய நாடுகளின் பட்டியலில் வல்லரசு நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி அமீரகம் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. அமீரகத்தின் இதுவரை 91% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதேபோல 80%க்கும் அதிகமானோருக்கு இரு தவணை தடுப்பூசி செலுத்தியதன் மூலம் உலகளவில் அமீரகம் 2ம் இடத்தில் உள்ளது.
81% பேருக்கு 2 தவணை தடுப்பூசிகளை செலுத்தி போர்ச்சுகல் நாடு முதலிடம் வகிக்கிறது. இதேபோல ஒவ்வொரு ஆயிரம் நபர்களுக்கும் அதிகளவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நாடுகளில் அமீரகம் 3ம் இடம் வகிக்கிறது. கொரோனாவால் குறைந்தளவு உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் அமீரகம் 5ம் இடத்தில் உள்ளது. சுகாதாரத்துறையின் தன்னிகரில்லா சேவையால் உலக அரங்கில் கொரோனாவை வெல்வதில் அமீரகம் முன்னணி இடத்தில் உள்ளதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
