fbpx
UAE Tamil Web

அமீரகத்திலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா மருந்தின் முதல் டோஸ் சுகாதார அமைச்சருக்கு செலுத்தப்பட்டது..!

UAE-minister-vaccine_

அமீரகத்தில் மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கும் கொரோனா தடுப்பூசியை கடந்த வாரத்தில் முன்னிலை சுகாதார ஊழியர்களுக்கு அளிக்க அரசு அனுமதியளித்தது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்புக்கான அமைச்சருக்கு கொரோனா மருந்தின் முதல் டோஸ் இன்று செலுத்தப்பட்டது.

இதுகுறித்துப் பேசிய சுகாதார மற்றும் நோய்த்தடுப்புக்கான அமைச்சர் அப்துல் ரஹ்மான் பின் முகமது அல் ஓவைஸ் (Abdul Rahman Bin Mohammad Al Owais),” கொரோனா நோயாளிகளுடன் நெருங்கிப் பழகும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக இந்த கொரோனா மருந்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. சட்ட மற்றும் வழிமுறைகளின் ஒப்புதலுடன் இம்மருந்தின் உரிமை நடைமுறைகளை விரைவாக மதிப்பாய்வு செய்யலாம்” என்றார்.

அமீரகத்தில் மேற்கொள்ளப்பட்ட இம்மருந்தின் சோதனைகள் நேர்மறையான முடிவுகளையே அளித்திருக்கின்றன. இது மிகவும் பாதுகாப்பானது. இதன்மூலமாக கொரோனாவினால் ஏற்படும் இழப்புகளைத் தடுக்கலாம் என ஓவைஸ் தனது பேச்சின்போது குறிப்பிட்டார்.

மூன்றாம் கட்ட பரிசோதனை

அமீரகத்தில் நடைபெற்றுவரும் மூன்றாம் கட்ட சோதனையை அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கும் குரூப் 42 மற்றும் சீனாவின் மருந்தக துறை ஜாம்பவானான சினோபார்ம் (Sinopharm) ஆகியவை இணைந்து மேற்கொண்டுவருகின்றன. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.