UAE Tamil Web

500 ஆக்சிஜன் செறிவூட்டிகளை இந்தியாவிற்கு வழங்கியது துபாய் சீக்கிய குருத்வாரா..!

Gurudwara

துபாயில் உள்ள குருநானக் தர்பார் மற்றும் BAPS இந்துக்கோவில் நிர்வாகம் ஆகியவை இந்தியாவிற்கு பிரம்மாண்ட அளவில் உதவிகளை செய்துவருகிறது.

இதுகுறித்துப் பேசிய குருநானக் தர்பாரின் தலைவர் சுரேந்தர் சிங் காந்தாரி,”இந்தியாவிற்கு 500 ஆக்சிஜன் செறிவூட்டிகளும் அடுத்த வாரத்தில் 2 ஆக்சிஜன் டேங்கர்களையும் வழங்க இருக்கிறோம். இவை டெல்லி, பஞ்சாப், மும்பை மற்றும் பாட்னா ஆகிய இடங்களுக்கு செல்ல இருக்கின்றன” என்றார்.

இதற்காக சீன நிறுவனத்திடம் ஆர்டர் செய்துள்ளதாகவும் மே 1 – 5 ஆம் தேதிகளில் அங்கே விடுமுறை என்பதால் 5 ஆம் தேதிக்குப் பிறகு கண்டெய்னர் வரும் என எதிர்பார்ப்பதாகவும் காந்தாரி தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில்,” மே 12 ஆம் தேதி அமீரகத்திலிருந்து 2 கண்டெய்னர்களை இந்தியாவிற்கு அனுப்ப இருக்கிறோம். தேவை மற்றும் சரக்குப் போக்குவரத்தின் அடிப்படையில் இவை இரண்டும் தொடர்ந்து பயன்படுத்தப்படும்” எனக் குறிப்பிட்டார்.

“டெல்லி, பஞ்சாப், மும்பை மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் உள்ள குருத்வாராக்களுக்கு இந்த பொருட்கள் அனுப்பப்படும். பின்னர் அங்கிருந்து விநியோகம் நடைபெறும். முடிந்தவரையில் அதிகமான உயிரைக் காப்பாற்றுவதே எங்களது இலக்கு” என அவர் குறிப்பிட்டார்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவித்துவரும் இந்தியாவிற்கு உலகின் பல நாடுகளும் உதவி செய்துவருகின்றன. இந்நிலையில் அபுதாபி BAPS இந்துக்கோவில் நிர்வாகம் இந்தியாவிற்கு ஆக்சிஜன் டேங்கர்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க இருக்கிறது.

“முதற்கட்ட நிவாரணப் பொருட்களில் மாதந்தோறும் 440 மெட்ரிக் டன் மெடிக்கல் ஆக்சிஜனை இந்தியாவிற்கு அனுப்பும் பணி இந்த வாரத்தில் இருந்து துவங்குகிறது. BAPS நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கொரோனா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு இது உதவியாய் இருக்கும்” என கோவில் தலைவர் பிரம்மவிஹாரிதாஸ் தெரிவித்தார்.

“இந்த வாரம் அனுப்பப்படும் முதல் சுற்று நிவாரணத்தில் 44 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன், 600 சிலிண்டர்களில் 30,000 லிட்டர் மருத்துவ ஆக்ஸிஜன் வாயு மற்றும் 130 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அடங்கும். இந்த மனிதாபிமான நடவடிக்கைகளில் விமான மற்றும் கடல்வழிப் போக்குவரத்திற்கு டிரான்ஸ்வேர்ல்ட் குழுமம் எங்களுக்கு உதவ முன்வந்திருக்கிறது” என அவர் தெரிவித்தார்.

Gurudwara
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap