தங்களது நாட்டின் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அளிக்கும் நாடுகளில் அமீரகம் முதலிடம் பெறுவதாக தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) தெரிவித்துள்ளது.
மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்திருக்கிறது.
Every individual who takes the vaccine is actively participating in the efforts to combat and overcome this pandemic and leads us to a recovered society.#TogetherWeRecover
— NCEMA UAE (@NCEMAUAE) January 26, 2021
இந்த வருடத்தின் முதல் காலாண்டிற்குள் 50 சதவிகித மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டுவருவதாக NCEMA தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 205 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல, அமீரகத்தில் சினோபார்ம், ஃபைசர் மற்றும் ஸ்புட்னிக் என மூன்று வகையான தடுப்பூசிகளுக்கு அமீரக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தடுப்பூசியின் பாதுகாப்பை உறுதிசெய்த பிறகே அமீரக அரசு தடுப்பூசித் திட்டத்தை துவங்கியது. “ஒரு வருட காலத்திற்கு அறிவியல் ஆய்வு கட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்ததன் அடிப்படையிலும் தடுப்பூசி தயாரிப்பதற்கான சர்வதேச முறைகளை கடைபிடித்தும் இந்த தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது” என NCEMA தெரிவித்துள்ளது.
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் முடிவுகளையும், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிகழ்ந்திருக்கும் தாக்கத்தையும் அமீரகம் கண்காணித்துவருகிறது.
The UAE monitors the results of the national vaccination campaign and its implications on the number of infections, as well as emphasizing the importance of adherence to precautionary and preventive measures, with an emphase on those who received the vaccine.#TogetherWeRecover
— NCEMA UAE (@NCEMAUAE) January 26, 2021
“கொரோனா தொற்றை கையாள்வதற்கும் தடுப்பு மருந்தின் மூலமாக இந்த சிக்கலில் இருந்து விடுபடவும் அரசு விதித்துள்ள வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை சமூக மக்கள் பொறுப்புணர்வுடன் கடைபிடிக்கவேண்டும். இதன்மூலமே கொரோனா தொற்றின் முதல் அலையை அமீரகம் வெற்றியுடன் எதிர்கொள்ள முடிந்தது. அவ்வாறே தற்போது இரண்டாம் அலையையும் மக்கள் எதிர்கொள்வார்கள் என நம்புகிறோம்” என NCEMA தெரிவித்துள்ளது.
டோலுனா சர்வதேச நுகர்வோர் கணக்கெடுப்பின் (ஜூன் 2020) படி, பொது சுகாதாரத்தை பராமரிப்பதற்கும் அரசாங்கத்தின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் சமூக நடவடிக்கைகள் பங்களித்தன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் பொதுமக்களின் திருப்திகரத்தின்படி உலகளவில் மூன்றாவது இடத்தையும் மத்திய கிழக்கில் முதலிடத்தையும் அமீரகம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தேசிய சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை மீறுபவர்களுக்கு 1000 – 50,000 திர்ஹம்ஸ் வரையில் அபராதமானது விதிக்கப்பட்டுவருகிறது.
அமீரக அரசானது கொரோனாவைக் கட்டுப்படுத்தல், இயல்பு நிலைக்கு நாட்டை அழைத்துச்செல்தல், பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்தல் என அனைத்து துறைகளிலும் சமநிலையைப் பேணுவதாக NCEMA தெரிவித்துள்ளது.