UAE Tamil Web

மிதக்கும் சொர்க்கம் என அழைக்கப்படும் க்ரூஸ் கப்பல்கள் அபுதாபிக்கு வரத் தொடங்கின..!

CRUISE SHIP

சுற்றுலாவுக்கு எனப் புகழ்பெற்ற அமீரகத்தில் பல்வேறு வகையான சுற்றுலாத்தலங்கள் இருப்பினும் க்ரூஸ் கப்பல்களே பெரும்பாலான மக்களை தன்வசம் ஈர்க்கும் வசீகரம் கொண்டவை என்றால் மிகையல்ல. சுற்றிக் கடல் அதிலே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், வித விதமான உணவுகள் என பூலோகத்து சொர்க்கமாகத் திகழும் இந்த க்ரூஸ் கப்பல் சுற்றுலாவை கொரோனா காரணமாக தற்காலிகமாக தடை செய்திருந்தது அமீரக அரசு.

இந்நிலையில் சுமார் ஒன்றரை வருடங்கள் கழித்து இன்று முதல் (செப்டம்பர் 1) மீண்டும் க்ரூஸ் சுற்றுலாக்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது அபுதாபி அரசு. கப்பல்களின் பணியாளர்கள் மற்றும் பயணிகள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்பதுபோன்ற கண்டிப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசால் விதிக்கப்பட்டுள்ளன.

மினா சயீத் போர்ட் மற்றும் சர் பனி யாஸ் ஐஸ்லேன்ட் ஆகிய இடங்களில் இன்று முதல் க்ரூஸ் கப்பல் சுற்றுலாக்கள் துவங்குவதால் பல சுற்றுலா விரும்பிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

2019 ஆம் ஆண்டில் அபுதாபியின் பல்வேறு சுற்றுலாத் தளங்களுக்கு பயணித்தோர் எண்ணிக்கை 11.35 மில்லியன் ஆகும். இதில் 518,000 பேர் சுமார் 193 க்ரூஸ் கப்பல்கள் மூலமாக அபுதாபி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கை குறைவாகத் தோன்றினாலும் ஒவ்வொரு ஆண்டுக்கும் இந்த எண்ணிக்கை 46 சதவீதம் அதிகரிக்கிறது எனில் இந்த சுற்றுலாவில் மக்களுக்கு இருக்கும் நாட்டம் எவ்வளவு என்பதை உங்களது யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

CRUISE SHIP
0 Shares
Share via
Copy link