கொரோனா பரவல் அச்சத்தால் கடந்த மே மாதம் பாதியிலேயே கைவிடப்பட்ட ஐபிஎல் 2021 தொடர் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. 31 ஆட்டங்கள் வரை அமீரகத்தில் நடைபெற உள்ள நிலையில் இறுதிப்போட்டி அக்டோபர் 15ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் இரண்டாவது பாதி தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்றிரவு துபாயில் மோத உள்ளன.
இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் தற்போது அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டங்களை கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். போட்டியை காண வரும் ரசிகர்கள், கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் தனி மனித இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை – மும்பை அணிகள் மோதும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை – மும்பை அணிகள் 31முறை நேருக்குநேர் சந்தித்துள்ளன. அதில் மும்பை 19 – 12 என முன்னிலை வகிக்கிறது. அவற்றில் 4 முறை பைனலில் மோதியதில் 2013, 2015, 2019ல் மும்பையும், 2010ல் சென்னையும் வாகை சூடியுள்ளன. கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் மும்பை 4 வெற்றியை ருசித்துள்ளது.
