கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஷார்ஜாவுக்கு விமான போக்குவரத்தை அதிகப்படுத்த இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜனவரி மாதம் 1,111 விமானங்கள் இயக்கப்பட்டன. அதில் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் ஷார்ஜா மற்றும் சிங்கப்பூருக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலையின்போது விமான போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் விமான போக்குவரத்து சீராகி நடைமுறைக்கு திரும்பி வருகிறது. இருப்பினும், எச்சரிக்கைகாக விமான போக்குவரத்தில் பயணிகள் எண்ணிக்க குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், தற்போது மீண்டும் விமானங்களின் இயக்கம் அதிகரித்துள்ளது.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘விமான இயக்கம் மற்றும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் கோவையில் இருந்து மொத்தம், 1,111 விமானங்கள் இயக்கப்பட்டன. அதில் உள்நாட்டு போக்குவரத்தில் 1,022 விமானங்களும், வெளிநாட்டு போக்குவரத்தில் 89 விமானங்களும் இயக்கப்பட்டன.
அடுத்தடுத்த மாதங்களில் விமானங்கள், பயணிகள் மற்றும் கார்கோ போக்குவரத்து சேவைகள் அதிகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்றனர்.
