UAE Tamil Web

நாயின் முன்னங்காலை வெட்டிய நபர் பற்றித் தகவல் தெரிவித்தால் 10,000 திர்ஹம்ஸ் சன்மானம்..!

DOG-REWARD-3

உம் அல் குவைனில் தனியார் நாய் பாதுகாப்பு மையம் ஒன்றினை நடத்திவருகிறார் அமிரா வில்லியம் என்னும் பெண்மணி. இவருக்கு கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ஒரு அழைப்பு வந்திருக்கிறது. போனில் பேசிய நபர், தெருநாய் ஒன்று காலில் அடிபட்டு, பாதமில்லாமல் கஷ்டப்படுகிறது. அதற்கு உதவுங்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.

சம்பவ இடத்திற்குச் சென்று, நாயை மீட்ட வில்லியம், தனது பாதுகாப்பு மையத்திற்கு கூட்டிச் சென்றிருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில்,” பாலைவன வகையைச் சேர்ந்த இந்த நாயின் முன்னங்காலை சமீபத்தில் யாரோ வெட்டி எடுத்திருக்கிறார்கள் என எங்களது விலங்குகள் மருத்துவக் குழு நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தற்போது நாய் ராஸ் அல் கைமாவில் உள்ள கிளினீக்கில் மோசமான நிலையில் இருக்கிறது” என்றார்.

இந்த கொடூர தாக்குதலை நிகழ்த்தியவன் பற்றிய தகவல் தெரிவித்தால் 10000 திர்ஹம்ஸ் சன்மானம் தருவதாக வில்லியம் தெரிவித்தார். முன்னதாக 5,000 திர்ஹம்ஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 10,000 என அதிகரிக்கப்பட்டுள்ளது.

“இருப்பினும் மக்கள் விளைவுகளை நினைத்து பயப்படுவதால், தகவல் தர முன்வருவதில்லை. சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடத்தில் நாயின் மீது இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். தெருநாய்கள் பொதுவாக, மனிதர்களைக் கண்டு அஞ்சி ஓடக்கூடியவை. உங்களுக்கு நாய்களைப் பிடிக்கவில்லை எனில் அவற்றை விட்டுவிடுங்கள். உதவி தேவைப்பட்டால் மீட்புக் குழுவிற்குத் தகவல் தெரிவியுங்கள்” என வில்லியம் தெரிவித்தார்.

விலங்குகளை துன்புறுத்துதல் அமீரக சட்டப்படி குற்றம் எனவும் இதற்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை ஆகியவை விதிக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

DOG-REWARD-3
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap