UAE Tamil Web

துபாய் : துணைத் தூதரக தீபாவளி விழாவில் 5 மதங்களைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பு..!

consulate diwali

நேற்று துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் தீபாவளியை முன்னிட்டு விளக்கேற்றும் விழா கொண்டாடப்பட்டது. இதில் மதங்களைக் கடந்து மனிதத்தைப் போற்றும் நோக்கில் 5 வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

- Advertisment -

அபுதாபி இந்து கோவிலைச் சேர்ந்த BAPS பிரம்மவிஹாரிதாஸ், அமீரக போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்த முகமது கொமுசி, மார் தோமா தேவாலயத்தின் பாதிரியாரான சிஜு செரியன் பிலிப், சீக்கிய குருத்வாராவைச் சேர்ந்த சுரேந்தர் சிங் காந்தாரி, ஜெயின் சமூகத்தில் இருந்து சந்து சிரோயா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சமூக மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஓமர் அல் முதன்னா, அமீரகத்தின் வளர்ச்சியில் இந்தியரின் பங்கு குறித்துப் பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய துணைத் தூதரக தலைமை அதிகாரி டாக்டர் அமன் பூரி,” கொரோனா காலத்திலும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட அனுமதியளித்த அமீரக ஆட்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கொண்டாட்டம் பல்வேறு மத சங்கிலிகளை அறுத்தெறிந்திருக்கிறது. சமூக மேம்பாட்டு ஆணையம் பல்வேறு மதங்களைச் சேர்ந்த சமூகங்களிடையே மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது” என்றார்.

“கொரோனா காரணமாக தீபாவளியன்று உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இல்லங்களுக்கு மக்களால் செல்ல முடியவில்லை. இருப்பினும் மக்கள் தங்களது வீடுகளை அலங்கரிப்பதைப் பார்க்க முடிகிறது. இவ்வருடம் வீட்டு அலங்காரப் பொருட்களின் விற்பனை அமோகமாக இருந்தது” என அல் மாயா குழுமத்தின் இயக்குனர் திரு.கமல் வாச்சாணி தெரிவித்தார்.

புர் துபாய் மற்றும் கராமா பகுதிகளில் உள்ள இந்தியர்கள் இவ்வருடமும் தங்களது வீடுகளை வண்ண விளக்குகளால் அலங்கரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு பிரார்த்தனை நேரம்

புர் துபாயில் உள்ள குரு தர்பார் சிந்தி கோவிலில் தீபாவளி சிறப்பு பூஜை நேரத்தினை அக்கோவிலின் பொது மேலாளர் கோபால் கோகனி வெளியிட்டார்.

நவம்பர் 13 – 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் காலை 7.30 முதல் 8.30 மணிவரையிலும் மாலை 6.30 முதல் 7.30 மணிவரையிலும் கோவிலில் பூஜை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் சமூக விலகலைக் கடைபிடிக்கவேண்டும் எனவும் கோவிலின் வெளிப்புறம் பக்தர்கள் கூடுவதைத் தவிர்க்குமாறும் கோகனி தெரிவித்தார். மேலும், அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிதல் வேண்டும் என கோகனி பக்தர்களுக்கு நினைவூட்டினார்.