இருளை விரட்டி வாழ்வில் புதிய ஒளியைக் கொண்டுவரும் தீபாவளிப் பண்டிகை இன்னும் சிலநாட்களில் வர இருக்கிறது. இதனையொட்டி அமீரக வாழ் இந்தியர்கள் தீபாவளிக்கான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். விளக்குகள், புத்தாடைகள், அலங்காரப் பொருட்கள், இனிப்புகள் என மகிழ்ச்சியை வெளிப்படுத்த தங்களுக்கான வழிகளை அமீரகத்தின் கடைவீதிகளில் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த வருடம் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க மக்கள் இப்போது ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

புர் துபாய் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வீட்டு அலங்காரப் பொருட்களை ஆர்வத்துடன் பார்வையிடும் மக்கள்.

புர் துபாயின் மதூர் சூப்பர் மார்கெட்டில் வாயில் தோரணங்கள் மற்றும் அலங்கார பொருட்களை பார்வையிடும் இந்தியர்கள்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ள வேண்டிய தருணம் என்பதால் கண்கவர் அலங்காரப் பொருட்கள் இந்தியர்களின் விருப்பத்திற்குரிய ஒன்றாக இருக்கின்றன.

புத்தாடைகள் இல்லாமல் தீபாவளியா? குழந்தைகளுக்கு தீப ஒளித் திருவிழாவிற்கான புதிய ஆடைகளை தேர்ந்தெடுக்கும் வேளை(லை)யில் பெற்றோர்கள்.

டோரன்ஸ் (Torans) எனவும் பந்தன்வார்ஸ் (Bandanwaars) எனவும் அழைக்கப்படும் இந்த அலங்கார வாயில் தோரணங்கள் விருந்தினரை வரவேற்கும் எண்ணத்தோடு நிலைப்படியில் தொங்கவிடப்படுகின்றன. அதைத்தான் கீழேயுள்ள பெண்மணி ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்.

தீபாவளிக்கு முந்தைய நாள் தங்கம் வாங்குவது சிறந்தது என்னும் பழக்கம் இந்தியர்களிடத்தில் இருக்கிறது. குறிப்பாக வட இந்தியர்களிடம். அந்நாளினை அவர்கள் தாண்டேராஸ் (Dhanteras) என அழைக்கிறார்கள். இதன்காரணமாக மீனா பசாரில் உள்ள நகைக்கடையில் நிரம்பி வழியும் கூட்டம். பெண்கள் என தனியாக சொல்லவேண்டுமா என்ன?

தீபாவளியன்று அகல்விளக்கு, மெழுகுவர்த்தி ஆகியவைக்கு டிமான்ட் அதிகம். நம்முடைய கலாச்சாரத்திலேயே இந்த விளக்கு சங்கதிகள் இருப்பதால் வண்ண விளக்குகளை வாங்க ஆர்வம் காட்டும் பெண்கள்.

கொரோனா – கட்டுப்பாடுகள் – சமூக இடைவெளி என நம்மைச்சுற்றி இறுக்கம் சூழ்ந்திருக்கும் காலம் இது. இருப்பினும் “இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது” என்ற பிரபஞ்சனின் வரிகளைப் போல மகிழ்ச்சியையும் புன்னகையையும் மீட்டெடுக்கும் வழியாக இந்தத் தீபாவளி இருக்கட்டும்.