அமீரகத்தைச் சேர்ந்த DP World குழுமம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது. தூத்துக்குடி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சேலம், ஈரோடு மற்றும் கோவை ஆகிய நகரங்களில் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் கண்டெய்னர் முனையம், சிறு துறைமுகம், குளிர்பதனக் கிடங்கு, பல்பொருள் கிடங்கு பூங்கா, நவீன வர்த்தகக் கிடங்கு மண்டலம் மற்றும் தகவல் தரவு மையம் போன்றவற்றை DP World நிறுவனம் தமிழ்நாட்டில் நிறுவ திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே DP World குழுமம் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்து 4000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் கண்டெய்னர் முனையங்கள், கண்டெய்னர் சரக்கு நிலையங்கள் உள்ளிட்டவற்றை நிறுவியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நடந்த இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் இறையன்பு, DP World நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ரிஸ்வான் சூமர், தலைமை நிர்வாக அதிகாரி ரஞ்சித் ரே உள்ளிட்டோர் இருந்தனர்.
