UAE Tamil Web

துபாய்: திருட்டுக்கு பிளான் போட்டுக்கொடுத்துவிட்டு காவல்துறைக்கும் போன் செய்த ஊழியர்..!

hand jail

துபாயில் போலீஸ் போல நடித்து 253,500 திர்ஹம்ஸ் கொள்ளையடித்த 5 பேர்கொண்ட கும்பலைக் கைதுசெய்திருக்கிறது துபாய் காவல்துறை.

தேராவில் உள்ள ஃப்ரீஜ் அல் முரர் பகுதியில் அமைந்துள்ள அந்த நிறுவனத்தில் சம்பவம் நடந்த அன்று 5 ஊழியர்கள் வேலையில் பிசியாக இருந்துள்ளனர். அப்போது காவல்துறை சீருடையுடன் வந்த 3 கொள்ளையர்கள் வேகமாக உள்ளே நுழைந்தனர்.

பாதுகாப்புப் பெட்டகத்தைத் தேடிய கொள்ளையர்கள் அதிலிருந்து 253,500 திர்ஹம்ஸ் பணத்தை திருடியிருக்கிறார்கள். மேலும், நிறுவனத்தில் இருந்த அனைவரையும் ஓர் அறையில் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்கள்.

இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறை அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் 3 கொள்ளையர்களை கண்காணித்திருக்கிறார்கள். அதன்பின்னர் 3 நாட்கள் நீடித்த தேடுதல் வேட்டையில் இறுதியாக மூவரும் சிக்கியுள்ளனர்.

மூவரில் ஒருவர் இந்தக் கொள்ளைக்கு ப்ளான் போட்டதாகவும் மற்றொருவர் காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் போல உடையணிந்து செல்லலாம் எனத் தெரிவித்திருக்கிறார். விசாரணையின்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளிகள் நிறுவனத்தில் பணிபுரிந்த இரண்டு ஊழியர்கள் இந்தத் திருட்டில் தங்களுக்கு உதவியதாகத் தெரிவித்துள்ளனர்.

திருட உதவி செய்தது மட்டுமல்லாமல் காவல்துறையிடம் நல்லவர் போல நடித்த இரண்டு ஊழியர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.