உலக அளவில் பெருந்தொற்றால் முடக்கநிலை ஏற்பட்ட பிறகு இந்த ஆண்டு மிகவும் பரபரப்பான கோடைகால பயணப் பருவத்தை நமது அமீரகம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. PCR சோதனைகள், தனிமைப்படுத்தல்கள் மற்றும் குடிவரவு அதிகாரிகளின் முன் அனுமதி போன்ற அனைத்து பயணக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டதால், பயணத் துறை மிகப்பெரிய அளவில் முன்னேறியுள்ளது.
அமீரக குடியிருப்பாளர்கள் வெளிநாட்டில் சிக்கித் தவிப்பதைப் பற்றி கவலைப்படாமல் தங்கள் சொந்த நாடுகளுக்கும் விடுமுறை இடங்களுக்கும் பறக்க அதிகளவில் தற்போது ஆர்வம் காட்டிவருகின்றனர்.
UAE விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் இந்த வாரம் பயணிகளுக்கு பயண ஆலோசனைகளை வழங்கியுள்ளன. ஈத் அல் அதா விடுமுறை மற்றும் பள்ளி கோடை விடுமுறைக்கு முன்னதாக டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்து வருவதால் – பல குடியிருப்பாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, விரும்பிய விமானத் தேதிகள் கிடைக்காத ஏமாற்றத்தைத் தவிர்க்க பயணிகள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஜூன் 24 மற்றும் ஜூலை 4க்கு இடையில் சுமார் 2.4 மில்லியன் பயணிகள் DXB (Dubai International Airport) வழியாக செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சராசரியாக தினசரி போக்குவரத்து 2,14,000 பயணிகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 2 மற்றும் ஜூலை 8-9 ஈத் அல் அதா வார இறுதியில் தினசரி போக்குவரத்து 2,35,000 பயணிகளுக்கு அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பெருந்தொற்றில் இருந்து வலுவான வகையில் உலகமே மீட்சியடைந்து வருவதால், DXBல் வருடாந்திர போக்குவரத்து 2021ல் 29.1 மில்லியனில் இருந்து இந்த ஆண்டு 58.7 மில்லியன் பயணிகளாக அதாவது இருமடங்காக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.