UAE Tamil Web

துபாயில் வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி, ஹேக்கருக்கு விற்ற வங்கி ஊழியர் சிறையில் அடைப்பு!

துபாயில் வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி, மோசடி செய்பவருக்கு விற்ற வங்கி ஊழியர் சிறையில் அடைக்கப்பட்டார்.

துபாய் குற்றவியல் நீதிமன்றம், 44 வயதான வங்கி வாடிக்கையாளர் சேவை ஊழியருக்கு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகவும், 100 வாடிக்கையாளர்களின் ரகசியத் தகவல்களை விற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

விசாரணைப் பதிவின்படி, இந்த வழக்கு மார்ச் 2021-க்கு முந்தையது. வங்கியின் வாடிக்கையாளர்களில் ஒருவர், வங்கியில் வாடிக்கையாளர் சேவை ஊழியர் என்று கூறி மோசடி செய்ததாக குற்றம்சாட்டினார். இதனடிப்படையில், வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்களை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்க, அனைத்தையும் புதுப்பித்து வருவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தனது அச்சத்தைப் போக்கவும், அவரது மோசடியில் சந்தேகம் கொள்ளாமல் இருக்கவும், தொலைபேசியில் பேசிய நபர் தனது கணக்கு விவரங்கள், வங்கி அட்டை எண் மற்றும் கணக்கில் உள்ள பணம் பற்றிய தகவல்களைத் தந்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, அவரது கணக்கில் இருந்து 10,000 திர்ஹம்கள் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. உடனடியாக பாதிக்கப்பட்ட பெண் ஏமாற்றியவரிடம் தொலைபேசியில் பேச முயன்றுள்ளார். அப்போது அது தவறுதலாக நடந்ததாகவும், அந்த தொகை சிறிது நேரத்தில் வங்கி கணக்கில் வைக்கப்படும் என ஏமாற்றியுள்ளார்.

அடுத்த சில வினாடிகளில் பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கில் இருந்து மற்றொரு 10,000 திர்ஹம்கள் எடுக்கப்பட்டதாக மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. மீண்டும் அந்த தொலைபேசிக்கு முயற்சித்த போது, ஃபோன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணையிலும், வங்கியின் மோசடி தடுப்புத் துறையிலும், வாடிக்கையாளர் சேவை ஊழியர், பாதிக்கப்பட்டவரின் கணக்கை மோசடி தேதிக்கு முன் ஆறு முறை அணுகியது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடியவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்கள், கார்டு மற்றும் கணக்கு விவரங்களை பயன்படுத்தி  20,000 திர்ஹம் திருடப்பட்டதாகவும், அந்த  தொகையில் ஒரு சதவீதத்தை வங்கி ஊழியருக்கு வழங்க முடிவு செய்ததாகவும்  ஒப்புக்கொண்டார். அவர் 100 வங்கி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடியதும் விசாரணையில் தெரியவந்தது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap