UAE Tamil Web

பார்களை திறக்கலாம் ; முடிவிற்கு வரும் கட்டுப்பாடுகள் – கொரோனா விதிமுறைகளைத் தளர்த்திய துபாய் அரசு..!

Dubai

துபாய் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் துபாயில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா விதிமுறைகளில் தளர்வுகளை இன்று அறிவித்துள்ளது. ஒருமாத காலத்திற்கு இந்தத் தளர்வுகள் நடைமுறையில் இருக்கும் எனவும் சூழலைப் பொறுத்து பின்னர் அவை நீட்டிக்கப்படும் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஹோட்டல்கள் மற்றும் திருமணத்திற்கான பிரத்யேக இடங்களில் நடைபெறும் திருமணங்களில் 100 பேர் கலந்துகொள்ளலாம். வீட்டில் திருமணம் நடைபெற்றால் 30 பேர் கலந்துகொள்ளலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்கவேண்டும்.

பொழுதுபோக்கு வளாகங்கள் 70 சதவிகித மக்களுடன் இயங்கலாம். ஹோட்டல்கள் தற்போது 80 சதவிகித மக்களுடன் இயங்கிவந்த நிலையில் தற்போது 100 சதவிகித வாடிக்கையாளர்களுடன் அவை இயங்கலாம் என ஆணையம் அறிவித்துள்ளது.

மால்கள், கபேக்கள் மற்றும் ரெஸ்டாரன்ட்களில் நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்த இன்றுமுதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.ரெஸ்டாரன்ட்களில் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ள விதிமுறைகளுக்குட்பட்டு பிரன்ச் (brunches) களை பரிமாறலாம்.

பார்கள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது இருப்பினும், வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்கவேண்டும்.

கச்சேரிகள் மற்றும் சமூக நிகழ்வுகளுக்கு அனுமதியளிக்கப்படும். ஆனால் பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைவரும் தடுப்பூசி பெற்றவர்களாக இருத்தல் அவசியம்.

உள்விளையாட்டரங்கங்களில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளையும் மக்கள் கண்டுகளிக்கலாம். பார்வையாளர்களின் எண்ணிக்கை அரங்கத்தின் 70 சதவிகித திறனுக்கும் அதிகமாக இருத்தல் கூடாது. உள் விளையாட்டு அரங்கங்களில் 1,500 பேரும் வெளி விளையாட்டு அரங்கங்களில் 2,500 மக்களும் பங்கேற்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட இந்த விதிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் எனவும், தவறுபவர்களைக் கண்காணிக்க அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் முடுக்கிவிடப்பட்டுள்ளனர் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது. விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தளர்வுகள் இருப்பினும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளைத் தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும் என ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

Dubai
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap