UAE Tamil Web

ஏழைகளின் பசியைப் போக்க போராடும் இந்தியருக்கு கோல்டன் விசா – துபாய் ஆட்சியாளரின் அதிரடி உத்தரவு..!

saleria

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோகிந்தர் சிங் சலேரியா. கடந்த 1993 ஆம் ஆண்டு அமீரகத்திற்கு கையில் 1000 ரூபாய் பணத்துடன் வந்த இவர் இன்று அமீரக அரசின் 10 வருடங்களுக்கான கோல்டன் விசாவைப் பெற்றிருக்கிறார்.

கனரக பாகங்கள் விற்பனையைத் தொழிலாக செய்துவந்தாலும் சலேரியா அறியப்படுவது அவரது மனிதாபிமான செயல்களுக்காகத்தான். கடந்த 2012 ஆம் ஆண்டு புது தில்லியில் பெஹல் சேரிட்டபில் ட்ரஸ்ட் (PCT) -ஐ சலேரியா துவங்கினார்.

வெள்ளம், பூகம்பம் என இயற்கை பேரிடர்களின் போது அசுர வேகத்தில் இவரது படைகள் களம்கண்டு வறியவர்களின் பசியைப் போக்கியிருக்கிறது. இந்தியா மட்டுமல்லாமல் உகாண்டா போன்ற பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாடுகளில் உள்ள மாணவர்களுக்கு கல்வி மற்றும் சுகாதார தேவைகளை இவரது குழு தீர்த்துவருகிறது.

இவரது வளர்ச்சியில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது, 2018 ஆம் ஆண்டு துபாயில் உள்ள வேர்ல்ட் ஹியூமனேட்டேரியன் சிட்டியில் ஒரு அலுவலகத்தை திறந்தது தான்.

2019 ஆம் ஆண்டு அபுதாபியில் மாபெரும் பசியோழிப்பு வரிசையை அபுதாபியில் நடத்தியது உலக அளவில் இவருக்கு வெளிச்சம் தேடித்தந்தது. இது கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

பாக்கிஸ்தானின் வறண்ட பிரதேசத்தில் கையில் இயக்கக்கூடிய 70 பம்ப்களை சலேரியா அளித்து கருணைக்கும் அன்பிற்கும் மதம், மொழி பாகுபாடு இருக்க முடியாது என உணர வைத்தார்.

தனது இந்த வெற்றிக்கு அமீரக ஆட்சியாளர்களின் உதவியும் தன்னம்பிக்கையுமே காரணமாகும் எனக் கூறும் சலேரியா,” எத்துணை வேற்றுமைகள் இருந்தாலும் நம்மால் ஒருவருக்கொருவர் அன்புடன் இருக்க முடியும் என நான் தீர்க்கமாக நம்புகிறேன்” என்கிறார்.

saleria
0 Shares
Share via
Copy link