UAE Tamil Web

இனி வாட்சாப் மூலமாகவே கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம் – இதை மட்டும் செய்தால் போதும்..!

whatsapp

துபாய்: தடுப்பூசிக்காக முன்பதிவு செய்பவர்களுக்கு உதவவும், எளிதில் மக்களுக்கு தடுப்பூசியை வழங்கும் நோக்கிலும் வாட்சாப் மூலமாக தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யும் திட்டத்தைத் துவங்கியுள்ளது துபாய் சுகாதாரத்துறை.

வாட்சாப் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலமாக உங்களுக்கு அருகில் உள்ள தடுப்பூசி மையங்கள், தடுப்பூசி கிடைக்கும் தேதி, நேரம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

உங்களுடைய போனில் 800 342 என்ற எண்ணை சேமித்துவைக்கவும். பின்பு அந்த எண்ணில் உள்ள வாட்சாப்பிறகு Hi என மெசேஜ் அனுப்பவும். அருகில் உள்ள தடுப்பூசி மையங்கள், நேரம் மற்றும் தேதி ஆகியவை திரையில் தெரியும். உங்களுக்குத் தகுந்த மையம், நேரம் மற்றும் தேதியை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். 24/7 மணி நேரமும் இயங்கும் இந்த சேவையைப் பெற நீங்கள் உங்களுடைய மெடிக்கல் ரெக்கார்ட் நம்பரை உள்ளீடு செய்யவேண்டும் (MRN). பதிவு செய்தபிறகு அதற்கான உறுதி குறுஞ்செய்தியும் (Confirmation Message) உங்களுக்கு அனுப்பப்படும்.

இந்த ஹாட்லைன் சேவையை துபாய் சுகாதாரத்துறை அறிமுகப்படுத்தியதில் இருந்து இதுவரையில் 150,000 கொரோனா குறித்த தகவல்கள் இதன்மூலம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய துபாய் சுகாதாரத்துறையின் வாடிக்கையாளர் சேவை மைய இயக்குனர் ஃபட்மா அல் காஜா,” இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலமாக மக்கள் தங்களுக்கான தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம். இதன்மூலமாக தடுப்பூசித் திட்டத்தின் வீச்சு அதிகமாகும். இந்த சேவை 24 மணிநேரமும் வழங்கப்படும் என்பதால் மக்களால் எளிதில் முன்பதிவு செய்யமுடியும்” என்றார்.

MENA பகுதிகளுக்கான நிர்வாக இயக்குனர் ரமிஸ் செஹாதி இதுபற்றிப் பேசுகையில்,” மக்களையும் சுகாதார தகவல்களைத் தரும் அதிகாரப்பூர்வ அமைப்புகளையும் இணைப்பில் வைத்திருப்பதன் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. மக்கள் எளிதில் தங்களுக்கான தடுப்பூசியை வாட்சாப் மூலமாக பெற துபாய் சுகாதரத்துறையுடன் இணைந்து உதவுவது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

கடந்த வருடம் மட்டும் 150 மாவட்டங்கள், உள்ளூர் அரசுகள் மற்றும் WHO, UNICEF ஆகிய அமைப்புகளுடன் வாட்சாப் இணைந்து பணியாற்றியிருக்கிறது. இதன்மூலமாக 200 கோடி பேருக்கு துல்லியமான சுகாதார தகவல்கள் வாட்சாப் மூலமாக வழங்கப்பட்டிருக்கின்றன. சுகாதாரப் பணிகள் சம்பந்தமாக கடந்தாண்டு மட்டும் 300 கோடி மெசேஜ்கள் உலகம் முழுவதிலும் அனுப்பப்பட்டிருக்கின்றன.

பயனர்களின் பக்கத்தில் எளிதில் தெரியுமாறு பேஸ்புக் நிர்வாகமும் கொரோனா குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.